இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (வியாழக்கிழமை) இந்தியாவிற்கு வருகைத்தரவுள்ளார்.
இதன்போது குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு செல்லும் பொரிஸ் ஜோன்சன், அங்குள்ள முன்னணி வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து இரு நாடுகள் இடையேயான வர்த்தகம், மற்றும் மக்கள் தொடர்பு குறித்து விவாதிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து புதுடெல்லி செல்லும் அவர், நாளையதினம் (வெள்ளிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையின்போது உக்ரைன் விவகாரம், இந்தோ-பசுபிக் பாதுகாப்பு உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரு தரப்பு உறவுகள், பாதுகாப்பு தொழில்நுட்பம் பொருளாதாரம், எரிசக்தி உள்ளிட்டவை குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.