உலகத்தையே அதிர்வுக்குள்ளாக்கிய ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (வியாழக்கிழமை) மூன்று வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.
உலக வாழ் கிறிஸ்தவ மக்கள், சமாதானத்தின் இறைவனாம் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை கொண்டாடிக்கொண்டிந்த, இதேபோன்றதொரு தினத்தில்தான் அந்தக் கொடியச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
8.45 மணி முதல் 9 மணிவரையான அந்தக் காலப்பகுதியில் இலங்கையின் 8 இடங்கள் குண்டுச் சத்தங்களினால் அதிர்ந்தன.
கத்தோலிக்க – கிறிஸ்தவ தேவாலயங்களையும் நட்சத்திர ஹோட்டல்களையும் இலக்குவைத்து பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதலில் சுமார் 269 பேர் கொல்லப்பட்டனர். அத்தோடு, 500இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, நூற்றுக்கணக்கானோர் அவையங்களை இழந்து அங்கவீனர்களாக்கப்பட்டனர்.
கனவில்கூட கற்பனை பண்ணிப் பார்க்க முடியாத இந்தக் கண்மூடித்தனமான தாக்குதல், இன்றுவரை இலங்கை மக்களின் மனங்களில் ஆறா ரணமாக இருந்துக்கொண்டுதான் உள்ளது.
இலங்கையின் ஆட்சிமாற்றத்திற்கே காரணமான இந்தத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.
ஆனால், பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியோ இன்னும் பகல் கனவாகவே நீடித்து வருகின்றது. அரசாங்கம் மாறியதே தவிற பாதிக்கப்பட்ட மக்களின் நிலை மாறவில்லை.
சுவர்களிலும் தேவாலய கதிரை மேசைகளிலும் படிந்திருந்த இரத்தக்கரை, இதுபோன்று இனியொருத் தாக்குதல் வேண்டாம் என்றச் செய்தியையே பறைசாற்றியுள்ளன.
0000000000000000000000000000000
இந்த கொடூரமான தாக்குதலின் மூன்று வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு தாக்குதலுக்கு இலக்கான கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திலும் கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்திலும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் விசேட நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெறவுள்ள ஆராதனையில், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், இலங்கைக்கான வத்திக்கான் தூதுவர், அருட்தந்தைகள், மகா சங்கத்தினர், பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது பேராயரின் தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.