கிழக்கு உக்ரைன் பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ரஷ்ய படைகள், அங்குள்ள துறைமுக பகுதியான மரியுபோல் நகரை கைப்பற்றியுள்ளது. இதனை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நகரை ரஷ்ய படைகள், கைப்பற்றியதன் மூலம் மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மரியுபோல் நகரை கைப்பற்றியதற்காக ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், பாராட்டு தெரிவிததார்.
மரியுபோல் நகரில் உள்ள இரும்பு தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தாமல் கைப்பற்றுமாறு இராணுவத்தினருக்கு புடின் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார் என்பது நினைவுக்கூறத்தக்கது.
முன்னதாக மரியுபோல் நகரத்திற்குள் இருக்கும் உக்ரைன் வீரர்கள் தங்களுடைய ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு உடனடியாக சரணடைய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது மரியுபோல் நகரை ரஷ்ய படைகள், கைப்பற்றியுள்ளது.
போர் தொடங்கியதில் இருந்து குறைந்தது 2,500க்கும் மேற்பட்டோர் மரியுபோலில் கொல்லப்பட்டதாகக் உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும், இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என அரசாங்கம் கூறுகின்றது.
நகருக்குள் சுமார் 300,000 குடியிருப்பாளர்கள் சிக்கியுள்ளனர். அங்கு நீர், மின்சாரம் மற்றும் எரிவாயு ஆகியவை துண்டிக்கப்பட்டுள்ளன. ரஷ்ய துருப்புக்கள் மனிதாபிமான உதவிகளை வழங்க அனுமதிக்காததால், உணவு மற்றும் நீர் விநியோகம் குறைந்துள்ளது.
இதனிடையே, தீவிரமாக போர் நடந்து வரும் நிலையில், உக்ரைன் போர்க் கைதிகள் 19 பேரை ரஷ்யா விடுவித்துள்ளது.
இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை, விடுவிக்கப்பட்ட 60 வீரர்கள் உட்பட 76 உக்ரைனியர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.