ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட விசேட பொலிஸ் குழுவினர் இன்று(வெள்ளிக்கிழமை) கேகாலை நீதிவான் நீதிமன்றில் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளனர்.
அதில் நான்கு ரி-56 துப்பாக்கிகளை பொலிஸார் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், இதன்போது, 35 தோட்டாக்களையும் பொலிஸார் பயன்படுத்தியுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 19ஆம் திகதி ரம்புக்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டத்தைக் கலைப்பதற்காக, பொலிஸார் முயற்சித்தபோது, பொலிஸாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டது.
இதன்போது மேற்கொள்ள துப்பாக்கிப் பிரயோகத்தில் 42 வயதான சமிந்த லக்ஷான் என்பவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 14 பேர், கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 11 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், 3 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், ஒருவர் சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.