இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் டொலர்கள் நிதி உதவியை வழங்க இந்தியா தயாராக உள்ளது.
அத்துடன் இலங்கை விடயத்தில் இந்தியா அண்மைய ஆண்டுகளில் சீனாவிடம் இழந்த இடத்தை புதுடில்லி மீண்டும் பெற முயற்சிக்கிறது என ரொய்ட்டர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
1948 சுதந்திரத்திற்குப் பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு, அதன் முதல் கடனைத் திருப்பிச் செலுத்தாத நிலையில் இருக்கும் இலங்கை, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளிடம் உணவு, எரிசக்தி உட்பட நிதிக்கடனையும் கோரி வருகிறது.
ஆசிய ஜாம்பவான்களாக இருக்கும் சீனாவும், இந்தியாவும் ஏற்கனவே பில்லியன் கணக்கான டொலர்களை நிதி உதவியாக வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், ‘நாங்கள் நிச்சயமாக அவர்களுக்கு உதவ விரும்புகிறோம், மேலும் அதிக இடமாற்று வரிகள் மற்றும் கடன்களை வழங்க தயாராக இருக்கிறோம்’ என இலங்கையுடனான பல்வேறு கலந்துரையாடல்களை அறிந்த இந்திய வட்டாரம் தெரிவித்துள்ளது.
புதுடில்லியில் உள்ள ஒரு மூத்த அரசாங்க அதிகாரி, இலங்கை கடனை செலுத்த முடியாது என அவித்தமையானது கவலையளிக்கிறது.
எனினும், தெற்காசியாவை மையமாகக் கொண்ட ஆசிய கணக்குத்தீர்வக ஒன்றியத்திற்குச் செலுத்த வேண்டியவை போன்ற சுமார் 2 பில்லியன் டொலர்கள் நிலுவையைப் பெறுவதற்கு இந்தியாவின் உதவியை நாடுவதாகவும் இந்தியாவிடமிருந்து அதற்கு நேர்மறையான பதில் கிடைத்ததாக இந்திய வட்டாரம் மேலும் கூறியது.
இந்த விடயத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் விடயங்களை குறிப்பிட்டபோதும் தமது பெயர்களை வெளியிடுவதற்கு மறுத்துவிட்டனர் என்று ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இந்திய அரசாங்கம் மற்றும் அதன் மத்திய வங்கி, ஆகியன இலங்கையின் வெளியுறவு மற்றும் நிதி அமைச்சுக்கள் கோரிக்கைகளுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.
இந்தியா இதுவரையில் இலங்கைக்கு 1.9 பில்லியன் டொலர்களை கடன்கள் மற்றும் நாணய பரிமாற்றங்களில் வழங்கியுள்ளது. எரிபொருளுக்காக மேலும் 500 மில்லியன் டொலர்களை கடனாக இலங்கை கோரியுள்ளது.
சீனா 1.3 பில்லியன் டொலர்கள் சிண்டிகேட்டட் கடனையும் 1.5 பில்லியன் யுவான் மதிப்பிலான நாணயச் செலுத்தலையும் நீடித்துள்ளது.
மேலும் கடன்கள் மற்றும் வட்டிகளை மீளச் செலுத்துவதை தாமதப்படத்தல் ஆகியவற்றுக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கை சீனாவை நம்பியிருப்பதைக் குறைப்பதற்கு புதுடில்லி ஆர்வமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை சீனாவுக்கு சுமார் 3.5 பில்லியன் டொலர்கள் கடன்களை மீளச் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது.
இலங்கைத்தீவில் அமைக்கப்பட்ட மொத்த துறைமுகங்கள் மற்றும் சாலைகளில் 10.8 சதவீதமானவற்றை பீஜிங் பங்களிப்பைச் செய்துள்ளது.
இவ்வாறான நிலையில் ‘அவர்கள் (இலங்கை) சீனாவிடமிருந்து கடன் அளவைக் குறைக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம், மேலும் நாங்கள் வலுவான பங்காளிகளாக மாற விரும்புகிறோம்’ என குறித்த இந்திய வட்டாரம் தெரிவித்தது.
இலங்கையின் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, அத்தியாவசிப் பொருட்களான சீனி, அரிசி மற்றும் கோதுமை கொண்ட கப்பல்களையும் இந்தியா இலங்கைக்கு அனுப்பியிருந்தது.
இலங்கை பீஜிங்கில் தங்கியிருப்பதை புதுடில்லி முறையாகக் குறைக்கவில்லை என்றாலும், இலங்கையர்களுக்கு உதவி வழங்குவதற்கான நிபந்தனைகளில் சீனாவை விட இந்தியா சிறந்த நிலையில் உள்ளது என்பதை உணர முடிந்தது என குறித்த இந்திய வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், இலங்கை கடந்த திங்கட்கிழமை சர்வதேச நாணய நிதியத்துடன் கடன்களைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.
இதேவேளை, அத்தியாவசியமான பொருட்களை கொள்வனவு செய்வதற்கான அந்நியச் செலாவணி இருப்புக்களை தக்கவைத்துக்கொள்ளவதற்கு இலங்கையின் மத்திய வங்கி வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவது சவாலானது மற்றும் சாத்தியமற்றது’ என அறிவித்துள்ளது.
அதேநேரம், எரிபொருள், உணவு, மின்சாரம் மற்றும் மருந்துப் பற்றாக்குறைக்கு எதிராக ஒரு மாதத்திற்கும் மேலாக இலங்கையின் நாலாபுறமும் வீதிப் போராட்டங்கள் உத்வேகமெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.