இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையிலான அமைச்சரவை உபகுழுவானது கடந்த 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் முதன்முறையாக கூடியது. இந்த உபகுழுவானது சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாகக் முன்னெடுப்பதற்கான ஆலோசனையை முன்வைத்திருந்தது.
அத்துடன், இலங்கை மற்றும் ஜப்பான், மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையிலான பொருளாதார விடயங்கள் மற்றும் வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட ஏனைய இரண்டு உப குழுக்களும் இந்த உபகுழுவின் கூட்டத்தின் போது பங்கேற்றிருந்தன.
இந்த உபகுழுக்கள் இலங்கையின் ஏற்றுமதி கைத்தொழில்களுக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு சிறந்த மற்றும் இலாபகரமான வழிகள் உள்ளதா என்பதை தீர்மானிப்பதையே அடிப்படையாக் கொண்டு நியமிக்கப்பட்டதாகும்.
அந்த வகையில், குறித்த நாடுகளுடான வர்த்தகத்தை எளிதாக்குவதற்கு அந்தந்த நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் நம்பகமான பங்காளித்துவத்தை ஆராய்வதற்கான சாத்தியக்கூறுகளையும் பேராசிரியர் பீரிஸ் இக்கூட்டத்தின்போது குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பாக, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தடைப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்பான முன்னேற்றம் குறித்து ஆராய்வதோடு அந்த ஒப்பந்தத்தினை முன்னெடுப்பதற்கான கண்காணிப்புக்களைச் செய்ய வேண்டும் என்றும் உபகுழு முடிவு செய்தது.
குறித்த கூட்டத்தின் நிறைவாக, பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கான ஏற்றுமதி செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு இருதரப்பு உறவுகளை உடைய பங்காளி நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய பொருட்களின் பட்டியலை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் உடன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
தற்போதைய நிலையில், இலங்கையானது தமது ஏற்றுமதிப் பொருட்களுக்கான பரந்துபட்டிருக்கும் சீனாவின் சந்தையைக் கைப்பற்றும் நம்பிக்கையில் சீனாவுடன் இருதரப்பு வர்த்தக உடன்படிக்கையில் கவனம் செலுத்த விரும்புகின்றது.
இந்த முயற்சியானது பாரம்பரிய ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளை பெரிதும் தங்கியிருப்பதிலிருந்து இலங்கையை விடுவிப்பதை நோக்கமாக கொண்டதாகும்.
எவ்வாறாயினும், இந்த ஒப்பந்தம் இலங்கைக்கும், சீனாவுக்கும் நன்மை பயக்கும் வகையில் அமைய வேண்டுமானால், சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்கும் போது பல காரணிகளையும் கருத்தில் கொள்ளவேண்டியது அவசிமாகின்றது என துறைசார்ந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக சீனா ஒரு பாரிய பொருளாதார நாடாக உள்ளது. ஆகவே அதன் பொருளாதார அளவைக் கணக்கில் எடுத்துக்கொள்வது அவசியமாகும்.
மேலும் பொருளாதார சமச்சீரற்ற தன்மையை கருத்தில் கொண்டு, சீனாவும் இலங்கைக்கு வர்த்தக தாராளமயமாக்கலுக்கு (சிலி மற்றும் பாகிஸ்தானுடனான அணுகுமுறையின்படி) மிகவும் படிப்படியான அணுகுமுறையை எளிதாக்க வேண்டும், சந்தைக்கான முன்னுரிமை அணுகல் இலங்கைக்கு வழங்கப்பட வேண்டும், நிறுவன ஆதரவு மற்றும் விசாக்கள், உள்ளிட்ட விடயங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்பன அவற்றில் முக்கியமானவையாக உள்ளன.
இந்த விடயத்தில் இலங்கை, சீனா ஆகிய இருநாடுகளுக்கு இடையிலான வரலாற்றில் உள்ள விடயங்களை கவனத்தில் கொள்ளப்பட்டமையால் 2018 இல் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தப் பேச்சுக்கள் வலுவிழந்தன.
இரு நாடுகளுக்கும் இடையிலான சமநிலையற்ற ஏற்றுமதி முறையானது இலங்கை ஏற்றுமதியைக் நலிவடையச் செய்துவிடும் ஆபத்துகளைக் கொண்டிருந்தது.
இதனைக் கருத்திற்கொண்டு சுதந்திர வர்த்தக ஒப்பந்தப் பேச்சுக்களில் ஈடுபட்டவர்களில் ஒருவரான கே.ஜே. வீரசிங்க, 10 ஆண்டுகளில் இருதரப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதற்கு கொழும்புக்கு உரிமை உண்டு என வலியுறுத்தினார். ஆனால் பீஜிங்கில் அவ்விதமான நிலைப்பாடுகள் எவையும் காணப்பட்டிருக்கவில்லை.
அதேநேரம், இலங்கையின் நிலையான அபிவிருத்தியில் பீஜிங் தனது பங்களிப்பை வழங்குவதில் இன்னமும் மகிழ்ச்சியடைவதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுனிங்கிங் வலியுறுத்தினார்.
எவ்வாறாயினும், சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து மீளாய்வுப் பிரிவை நீக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் நீண்டகால ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு உதவும் என வீரசிங்க கூறினார்.
ஆசியாவினூடாக சுதந்திரமாக வர்த்தகம் செய்வதற்கு இலங்கைக்கு உதவும் வகையில், மண்டலம் மற்றும் பாதை முன்முயற்சித்திட்டத்தின் மூலம் சீனா இலங்கையில் பில்லியன் கணக்கான டொலர்கள் பெறுமதியான உட்கட்டமைப்பு முதலீட்டைச் செய்துள்ளது.
இருப்பினும், சீனாவின் மண்டலம் மற்றும் பாதை முன்முயற்சித்திட்டமானது சீன நலன்களை சிறிய நாடுகளுக்குள் செலுத்த பயன்படுத்தப்படும் திட்டமொன்றாகவே உலகளாவிய ரீதியில் பார்க்கப்படுகின்றது.
இலங்கையில் உள்ள மண்டலம் மற்றும் பாதை முன்முயற்சித்திட்டமானது இலங்கையின் இறையாண்மையை உறுதி செய்யாது, நாட்டின் 21மில்லியன் மக்களையும் கடனில் தள்ளும் அபாயங்களைக் கொண்டிருப்பதாக கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2018இல் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தப் பேச்சுக்கள் ஸ்தம்பிதமடைந்ததற்கான பிறிதொரு காரணமாகவிருப்பது, சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த 90சதவீதமான பொருட்களுக்கு பூஜ்ஜிய சுங்க வரியை சீனா வற்புறுத்தியமையாகும்.
இலங்கையானது தனது ஏற்றுமதிகளை 50சதவீத கட்டணங்களுடன் ஆரம்பிக்க விரும்பியது அத்துடன், அடுத்த ஆண்டுகளாக அச்சதவீதத்தினை படிப்படியாக அதிகரிக்கவும் எதிர்பார்த்தது. எனினும் சீனா அதற்கு மறுதலித்துவிட்டது. இதனால் சீனாவுடனான அவசர சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுக்கள் வலுவிழந்தன. இதன் தாக்கம் இலங்கையில் உணரப்படவில்லை.
எவ்வாறாயினும், 2018 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையை எதிர்மறையாகப் பாதித்த கொரோனா பரவலானது, பீஜிங்கிற்கான கடனைத் திருப்பிச் செலுத்துதில் தாமதங்களை ஏற்படுத்தியது. இதனால் தமது எளிதாக்குமாறு இலங்கை சீனாவிடம் பகிரங்கமாகக் கோரியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது, இறையாண்மையின் அடிப்படையில் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் திறனை மேலும் உறுதிசெய்துகொண்டு நாட்டுக்கு பாதகமாக அமையக்கூடிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.
2017ஆம் ஆண்டு அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் 99 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்க இலங்கை அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்ட போது, சீனாவிடமிருந்து கடனாகப் பெற்ற 1.5 பில்லியன் டொலர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல், இலங்கை அரசாங்கம் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த அனுபவம் நிறையவே உள்ளது.
இத்தகைய நிகழ்வுகள் உலகின் சிறிய நாடுகளில் வழக்கமாகிவிட்டன, அவ்விதமான நாடுகள் மண்டலம் மற்றும் பாதை முன்முயற்சித்திட்டம் மற்றும் சீன கடன்கள் ஆகியவற்றால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்க உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-யே.பெனிற்லஸ்-