தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த வாக்கெடுப்புக் கோரமால் இருப்பதற்கும், எவரேனும் வாக்கெடுப்பு கோரினால் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாமல் இருப்பதற்கும் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்திருந்த நிலையில், வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்படும் என்று முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது.
இதையடுத்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 157 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும் எதிராக 01 வாக்கும் கிடைத்தது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. எதிர்த்து வாக்களித்தார்.
2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரையை கடந்த நவம்பர் 7 ஆம் திகதி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.











