தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக் கூறவேண்டியுள்ளதுடன் தற்காலிக மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குவதற்கான முறையான அணுகுமுறையை எங்கள் அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ளதால், பலன்களை பெற்றுக்கொள்ள எங்களுக்கு சிறிது கால அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மூன்று நிக்காயாக்களினதும் தலைமை பீடாதிபதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று(திங்கட்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், “நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை விரைவில் தீர்ப்பது தொடர்பாக, மூன்று நிக்காயாக்களினதும் தலைமை பீடாதிபதிகள் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாக,
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் உடனடியாக தீர்ப்பது தொடர்பில் 04.20.2022ஆம் திகதியிடப்பட்டு எனக்கும், பிரதமருக்கும், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பிய கடிதம் தொடர்பில்
நீங்கள் முன்பு எனக்கு அனுப்பிய, அதாவது ஏப்ரல் 4, 2022 அன்று சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தின் உள்ளடக்கத்தை நான் எந்த வகையிலும் புறக்கணிக்கவில்லை என்பதை முதலில் மரியாதையுடனும், அன்புடனும் ஒப்புக்கொள்கிறேன்.
நீங்கள் சுட்டிக் காட்டியது போல், நாட்டில் ஏற்பட்டுள்ள உடனடி பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நாங்கள் ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
மக்கள் எதிர்கொள்ளும் மிகவும் கடினமான வாழ்க்கை நிலைமைகளைப் பற்றி நான் புரிந்து கொள்ளாமல் இல்லை. தினசரி, புள்ளி விவரங்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் நிபுணர்களின் உதவியுடன் நான் அமைச்சரவையுடன் இணைந்து பணியாற்றுவேன் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதன்படி, பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவு, மருந்து, வீட்டு எரிவாயு மற்றும் பல்வேறு எரிபொருள்கள் வழங்குவதற்கான திட்டங்கள் ஏற்கனவே தீவிர கண்காணிப்பில் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, என்னால் நியமிக்கப்பட்ட புதிய நிதியமைச்சர், மத்திய வங்கியின் புதிய ஆளுநர் மற்றும் திறைசேரியின் புதிய செயலாளர் ஆகியோர் சர்வதேச நிதி நிபுணர்களின் வழிகாட்டுதலின் கீழ், சம்பந்தப்பட்ட சர்வதேச நிதி நிறுவனங்களுடனும் நட்பு நாடுகளுடனும் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்து வருகின்றனர்.
இதன் விளைவாக, “சர்வதேச நாணய நிதியம்” மற்றும் இந்திய அரசு ஏற்கனவே நேர்மறையான பதிலை அளித்துள்ளதுடன், மேலும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அடுத்த சில வாரங்களில் நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை எதிர்வரும் சில வாரங்களில் தற்காலிக தீர்வுக்கு செல்ல முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
நான் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் புதிய அரசியலமைப்பை உருவாக்க சட்ட நிபுணர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. குழுவின் உறுப்பினர்கள்:
ஜனாதிபதி சட்டத்தரணி திரு.ரொமேஷ் டி சில்வா – தலைவர்
ஓய்வுபெற்ற பேராசிரியர் ஜி.எச். பீரிஸ்
நீதிபதி திரு. ஏ. டபிள்யூ.ஏ. சலாம்
ஜனாதிபதி சட்டத்தரணி திரு. மனோகார டி சில்வா
ஜனாதிபதி சட்டத்தரணி திரு. சஞ்சீவ ஜயவர்தன
ஜனாதிபதி சட்டத்தரணி திரு. சமந்த ரத்வத்தே
பேராசிரியர் ஏ. சர்வேஸ்வரன்
பேராசிரியர் டபிள்யூ. செனவிரத்ன
ஜனாதிபதி சட்டத்தரணி திரு. நவீன் மாரப்பன
திருமதி கௌசல்ய மொல்லிகொட – செயலாளர்
இந்தக் குழு சுமார் இரண்டு வருடங்களாக பல்வேறு அரசியல் கட்சிகள், பல்வேறு குழுக்கள் மற்றும் நிபுணர்களுடன் விரிவாக கலந்துரையாடி புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கான வரைவுகளை தயாரித்து வருகின்றது. அந்த வரைவுகள் தயாரிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டு வருவதாகவும் குழு எனக்கு தெரிவித்துள்ளது.
இவ்வாறாக தயாரிக்கப்பட்ட வரைபு கிடைக்கப்பெற்றவுடன் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அங்கீகாரத்தின் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த வரைவின் நகலை உங்களுக்கு அனுப்புகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில், நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் நான் உறுதியாக உள்ளேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு நான் ஆதரவளிப்பதாகவும், பாராளுமன்றத்தில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், ஜனாதிபதியும் பாராளுமன்றமும் இணைந்து அத்தகைய திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் அன்புடன் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
மேலும் நாட்டின் தற்போதைய நிலைமைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு தமது பங்களிப்புகளை எதிர்பார்த்து அனைத்துக் கட்சி மாநாட்டிற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டும், அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொண்டு நாடு எதிர்கொண்டுள்ள நிலையில் இருந்து மீட்டெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தூய்மையான எண்ணத்துடன் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை என்பதும் வருத்தமளிக்கிறது. இருப்பினும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் எனது அழைப்பு அவ்வாறே உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் என்ன செய்தாலும், அனைத்து செயல்முறைகளும் அரசியலமைப்பிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் மற்றும் தற்போதைய அரசியலமைப்பிற்குள் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும். எனவே, உங்களது முன்மொழிவுகளையோ அல்லது மக்களின் அபிலாஷைகளையோ நானோ அல்லது எமது அரசாங்கமோ எக்காலத்திலும் புறக்கணிக்கமாட்டோம் என்பதை நினைவுபடுத்துகின்றேன்.
அமைச்சரவை இல்லாமல் ஒரு நாட்டின் நிர்வாகத்தை நடத்த முடியாது. மேலும், அமைச்சரவை இல்லாதது நடைமுறைச்சாத்தியமற்றது. அதன்படி, மூத்த அமைச்சர்களின் உதவியுடன் பெரும்பான்மையான இளம் உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையை நான் நியமித்தேன்.
மக்களின் தற்போதைய பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வைக் காண்பதற்காக குறுகிய காலத்திற்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன என்பதை நான் மரியாதையுடன் குறிப்பிடுகிறேன்.
எனது பதவிக்காலத்தின் இரண்டரை வருடங்களில், பல்வேறு அரசியல் கட்சிகள், பல்வேறு இனக்குழுக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் நடத்திய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் போன்றவற்றில் நான் தடியடியோ, கண்ணீர்ப்புகையோ பிரயோகிக்கவில்லை. பொதுவாக இவ்வாறான போராட்டங்களை நசுக்குவதற்கு எமது அரசாங்கம் எதனையும் செய்யவில்லை என்பதை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். எனது அலுவலகத்திற்கு முன்பாக நடத்தப்பட போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை / ஆயுதப் படைகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவது போன்ற அடக்குமுறை நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை என்பதை மரியாதையுடன் நினைவுபடுத்துகிறேன்.
19.04.2022 அன்று பொதுமக்கள் போராட்டத்தின் போது நடந்த சம்பவத்தால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன், மேலும் இது குறித்து முறையான விசாரணை நடத்த பல குழுக்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த விசாரணைகள் முடிந்தவுடன் அதுபற்றி உங்களுக்கு அறிவிக்கவும் எதிர்பார்க்கின்றேன்.
நீங்கள் கூறியது போல், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக் கூறவேண்டியுள்ளதுடன் தற்காலிக மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குவதற்கான முறையான அணுகுமுறையை எங்கள் அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ளதால், பலன்களை பெற்றுக்கொள்ள எங்களுக்கு சிறிது கால அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எதிர்காலத்திலும் உங்களின் ஆலோசனை மற்றும் அறிவுரைகளை மரியாதையுடன் எதிர்பார்க்கிறேன்.
தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், எமது நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க நீங்கள் முன்மொழிந்தால், எனது முழு ஆதரவையும் வழங்குவேன் என்பதை நான் மரியாதையுடன் நினைவு கூர்கிறேன்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.