அரச செலவினங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட சுற்றறிக்கை நிதி அமைச்சின் செயலாளரினால் அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஆரம்பிக்கப்படவிருந்த அனைத்து திட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இதுவரை நிரப்பப்படாத வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு ஒத்திவைப்பு, அமைச்சரவையால் அங்கீகரிக்கப்படாத கொடுப்பனவுகள், உதவித்தொகை வழங்குவதை நிறுத்துதல், அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் கடன் வசதிகளை இந்த வருட இறுதி வரை இடைநிறுத்துதல் மற்றும் அனைத்து நலன்புரி மற்றும் மானியத் திட்டங்களை நிறுத்துதல் ஆகிய விடயங்கள் உள்ளடங்கலாக இந்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
இதனை தவிர, எரிபொருள், தகவல் தொடர்பாடல்களுக்கான கொடுப்பனவுகள், நீர் மற்றும் மின்சார செலவுகள், அத்துடன் கட்டட நிர்மாணம் மற்றும் வாடகைக்கு பெறுவதை தடுப்பது மற்றும் உள்நாட்டு நிதியினால் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு ஆய்வுப் பயணங்கள் மற்றும் பயிற்சிகளை இடைநிறுத்துவது போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.