இடைக்கால அரசாங்கத்தினை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் காலை 10.30 மணிக்கு இந்தக் கலந்துரையாடல் ஆரம்பமாகவுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, 10 கட்சிகள் அடங்கிய குழு மற்றும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி சுயேச்சையாக செயற்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள தீர்மானித்துள்ளனர்.
பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவை இராஜினாமா செய்த பின்னர் அமைக்கப்படும் காபந்து அரசாங்கம் குறித்து இதன்போது பேசப்படவுள்ளது.
அத்துடன், இடைக்கால அரசாங்கத்தின் கட்டமைப்பு, பதவிக்காலம் மற்றும் பொறுப்புகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாகவும் கூறப்படுகின்றது.
முன்னதாக கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி எழுதியுள்ள கடிதத்தில், நாடாளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளையும் இணைத்து இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கொள்கையளவில் இணக்கம் தெரிவிப்பதாக ஜனாதிபதி கொள்கையளவில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படாமல் நேற்று பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டம் நிறைவு பெற்றது.
இந்த சந்திப்பில் திஸ்ஸகுட்டியாராச்சி மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோரும் கலந்துரையாடியுள்ளனர்.