இம்மாதம் நான்காம் திகதி நான்கு மகா நாயக்கர்களும் அரசுத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினார்கள்.ஆனால் கோட்டாபய அதற்கு பதில் கூறவில்லை. அதன்பின் 20ஆம் திகதி மற்றொரு கடிதத்தை எழுதினார்கள்.
அதன்பின் கடந்த வாரம் அரசுத்தலைவர் மகா நாயக்கர்களுக்கு ஒரு பதில் அனுப்பியிருந்தார். மகா நாயக்கர்கள் அனுப்பிய கடிதத்தில் ஒரு முக்கிய விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார்கள்.நாட்டில் இப்போது நிலவும் அரசியல் ஸ்திரமின்மையை அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் தீர்க்க தவறினால் மகாசங்கம் சங்கப் பிரகடனத்தைச் செய்யும் என்பதே அதுவாகும்.
சங்கப் பிரகடனம் எனப்படுவது சிங்களத்தில் “சங்க ஆக்ஞாபய” என்று அழைக்கப்படுகிறது.மன்னர்களின் காலத்தில் அது பிரயோகத்தில் இருந்திருக்கிறது.ஒரு மன்னன் சரியானபடி ஆட்சி செய்யவில்லை என்றால் அந்த ஆட்சியை எதிர்த்து மகாசங்கம் ஒரு பிரகடனத்தை செய்யும். அப்பிரகடனத்தின்படி குறிப்பிட்ட மன்னன் ஆட்சி செய்யும் தகுதியற்றவன் என்று கருதப்பட்டது.
அந்த மன்னன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் மகாநாயக்கர்கள் அல்லது ஏனைய மகா சங்கத்தின் பிரதிநிதிகள் பங்குபற்ற மாட்டார்கள்.பிக்குகள் பங்குபற்றும் மத நிகழ்ச்சிகளில் அந்த மன்னன் பங்குபற்ற முடியாது. மேலும் பௌத்த விகாரைகளுக்குள் மன்னன் அனுமதிக்கப்பட மாட்டார். அதாவது கிட்டத்தட்ட மன்னனை பௌத்த மதத்திலிருந்து நீக்கியதற்கு சமம்.
இவ்வாறு மகாநாயக்கர்கள் பிரகடனம் செய்தால் அதை பொதுமக்களும் பின்பற்றுவார்கள். இது அந்த மன்னனுக்குரிய அங்கீகாரத்தையும் அந்தஸ்தையும் கீழே இறக்கிவிடும். எனவே மன்னர்களின் காலத்தில் மகா சங்கத்தின் பிரகடனம் எனப்படுவது அதிக முக்கியத்துவம் உடையதாகவும் அரசியல் மற்றும் ஆன்மீகச் செல்வாக்கு மிக்கதாகவும் காணப்பட்டது. இது தொடர்பாக சிங்கள இலக்கியங்களில் குறிப்புகள் உண்டு என்று சிங்கள அறிஞர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் நவீன காலத்தில், நவீன அரசியலில் மகாசங்கம் இவ்வாறு தலையிட்டிருப்பது இதுதான் முதல் தடவை என்று கூறப்படுகிறது. அதாவது அந்தளவுக்கு அரசியல் நெருக்கடி ஒரு விபரீதமான, பாரதூரமான வளர்ச்சியை அடைந்து விட்டது என்று பொருள். அதில் உண்மை உண்டு. அதாவது அரசியல் நெருக்கடி காரணமாக நாட்டில் அரசாங்கம் என்ற ஒன்று இல்லை என்ற ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது.
நாட்டில் அரசாங்கம் என்ற ஒன்று உண்டா என்ற கேள்வி பல மாதங்களுக்கு முன்னரே எழுந்துவிட்டது. குறிப்பாக டெல்டா திரிபு வைரஸ் தாக்கத் தொடங்கியபின் அவ்வாறு கேள்வி விமர்சகர்களால் எழுப்பப்பட்டது. அதாவது அரசாங்கம் எப்பொழுதோ தோற்று விட்டது.ஆனால் அந்தத் தோல்வியை தங்களுடையதாக மாற்றிக்கொள்ளக்கூட எதிர்க்கட்சிகளால் முடியவில்லை.
எதிர்க்கட்சிகளும் அந்தளவுக்கு பலமாக இல்லை.இதுகாரணமாக ஒருவித அரசாங்கம் இல்லாத நிலைமை தோன்றியிருக்கிறது.
அதேசமயம் ராஜபக்சக்களை வீட்டுக்கு போகுமாறு கேட்டு காலிமுகத்திடலிலும் நாட்டின் ஏனைய நகரங்கள், தெருக்களிலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ராஜபக்ச குடும்பத்தை மிகக் கீழ்த்தரமான வார்த்தைகளால் நிந்தித்து வருகிறார்கள்.
சிங்களத்தில் காணப்படும் பெரும்பாலான தூசண வார்த்தைகளை அவர்கள் ராஜபக்ஷக்களுக்கு எதிராகப் பயன்படுத்துகிறார்கள். ராஜபக்ச குடும்பத்தின் வம்சச் சின்னமாக காணப்பட்ட குரக்கன் சால்வை இப்பொழுது ஒரு கேலிப் பொருளாக நாட்டில் அதிகம் அவமதிக்கப்படும் ஒரு குறியீடாக மாறியிருக்கிறது.
பல மாதங்களுக்கு முன்பு பெருந் தொற்றுச் சூழலுக்குள் முஸ்லீம்களின் சவ அடக்க உரிமையை ராஜபக்சக்கள் மறுத்தார்கள். அதற்கு எதிராக முஸ்லிம்கள் கபன் துணியை பொது இடங்களில் சிறு முடிச்சுகளாக கட்டி தமது எதிர்ப்பை வெளியிட்டார்கள்.கபன் துணி எனப்படுவது எதிர்ப்பின் குறியீடாக பார்க்கப்பட்டது.
ஆனால் இப்பொழுது ராஜபக்ஷவின் குடும்ப சின்னம் என்று கருதப்பட்ட குரக்கன் நிறச் சால்வை நாட்டில் இகழ்ச்சியின் சின்னமாக, வெறுப்பின் சின்னமாக,அதிகம் அவமதிக்கப்படுகிறது.
உதாரணமாக சில வாரங்களுக்கு முன் காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கே குப்பைக்கூடைகளின் கழுத்தில் குரக்கன் சால்வையைக் கட்டியிருந்தார்கள்.
அதேபோல சில கலைஞர்கள் குப்பைத் தொட்டிக்குள் போடப்பட வேண்டிய ஒரு பொருளாக குரக்கன் சால்வை துண்டை உருவகித்திருந்தார்கள். பூர்ணிமா ஜெயசிங்க என்றழைக்கப்படும் ஒரு ஓவியர் அன்மையில் குரக்கன் சாலையை ரொய்லெட் பேப்பரில் -கழிப்பறைப் பேப்பரில்- வரைந்து வைத்திருந்தார்.
மேலும் கழிப்பறை குழிக்குள் குரக்கன் சால்வையை வைத்து ஓவியங்களை உருவாக்கியிருந்தார். இந்த ஓவியங்களை பார்த்தபின் பின்னூட்டத்தில் ஒருவர் எழுதியிருந்தார்… அந்த சால்வை பொறிக்கப்பட்ட ரொய்லெட் பேப்பரை மலம் துடைப்பதற்குகூட பயன்படுத்தக்கூடாது என்ற தொனிப்பட.
அதாவது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் இரண்டாவது துட்டகைமுனுக்களாக போற்றப்பட்ட யுத்த வெற்றி நாயகர்கள் எந்தளவுக்கு எந்த அளவுக்கு அவமதிக்கப்படுகிறார்கள் என்பதனை இவை காட்டுகின்றன.
இவ்வாறு ஒருபுறம் நாட்டில் அரசாங்கம் இல்லாத ஒரு நிலைமை. இன்னொருபுறம் யுத்த வெற்றி நாயகர்களை அவமதிக்கும் ஆர்ப்பாட்டங்கள். இவை இரண்டினதும் பின்னணியில் மகா சங்கம் தலையீடு செய்தது.
மகாசங்கம் ஏன் தலையிட்டது? ஏனென்றால் அரசாங்கம் இல்லாத ஒரு நிலைமை என்பது அதன் தர்க்கபூர்வ விளைவாக சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பை பலவீனப்படுத்திவிடும். அதோடு யுத்தவெற்றி நாயகர்களை அவமதிப்பது என்பது அதன் தர்க்கபூர்வ விளைவாக யுத்த வெற்றியையும் அவமதிப்பதாக மாறக்கூடும் என்று மகாசங்கம் அஞ்சியிருக்கலாம்.
யுத்த வெற்றி எனப்படுவது.அவர்களை பொறுத்தவரை சிங்கள பௌத்தத்திற்கு கிடைத்த வெற்றி. சிங்கள அரசு கட்டமைப்பை எதிர்த்துப் போராடிய ஒரு ஆயுதப் போராட்டத்தை நசுக்கிப் பெற்ற வெற்றி.
எனவே சிங்கள பௌத்த ஒற்றையாட்சி கட்டமைப்பைப் பாதுகாக்கும் ஒரு வெற்றியை இழிவுபடுத்த மகாசங்கம் தயாரில்லை. ஏனென்றால் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்புத்தான் மகா சங்கத்தை பாதுகாக்கும்,போஷிக்கும். சிங்களத்துக்கும் பௌத்தத்துக்கும் முன்னுரிமை வழங்கும் ஒற்றையாட்சிக் கட்டமைப்பே மகா சங்கத்திற்கு பாதுகாப்பானது.
பல்லினத் தன்மைமிக்க, பல்சமய பண்புமிக்க, பல மொழிப் பண்பு மிக்க ஒரு அரசுக் கட்டமைப்பு எனப்படுவது மகாசங்கம் பௌத்தமும் இப்பொழுது வகிக்கும் முதன்மையை ஒப்பீட்டளவில் குறைக்கக் கூடும். அவ்வாறு குறைக்கத் தாங்கள் விரும்பவில்லை என்ற செய்தியை கடந்த நல்லாட்சி காலகட்டத்தில் சம்பந்தர் அடிக்கடி கூறிவந்ததை இங்கு நினைவுபடுத்த வேண்டும்.
ஏனெனில் இலங்கைத்தீவில் ஒற்றையாட்சி கட்டமைப்பும் எனப்படுவது சிங்கள-பௌத்த சிந்தனைகளின் சட்டபூர்வ வடிவம் ஆகும். மகா சங்கம் அதன் ஒரு பகுதியாக காணப்படுகிறது. எனவே சிங்கள பௌத்த ஒற்றையாட்சி கட்டமைப்பு பலவீனம் அடைவதை மகாசங்கம் அனுமதிக்காது. இக்காரணங்களை முன்வைத்து மகாசங்கம் அரசியலின்மீது நிர்ணயகரமான ஒரு தலையீட்டைச் செய்ய முற்படுகிறது.
மகா நாயக்கர்கள் சங்கப் பிரகடனத்தை செய்யப்போவதாக வெருட்டியதும் அரசுத்தலைவர் இறங்கிவந்தார். அவர் மகாசங்கம் கேட்டுக்கொண்டபடி அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு இடைக்கால ஏற்பாட்டுக்கு தயார் என்றும் அறிவித்தார்.அதே சமயம் மகாசங்கம் கேட்டுக் கொள்வது போல எதிர்க்கட்சிகளை இணைப்பது என்றுசொன்னால் அது ஆளுங்கட்சியால் முடியாது.
ஏனெனில் எதிர்க்கட்சிகளை அரவணைத்து ஒரு புதிய ஏற்பாட்டுக்கு போகும் சக்தியை ஆளுங்கட்சி இழந்து விட்டது. அதனால்தான் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியபின் கடந்த சில கிழமைககளாக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் செய்துவரும் மாற்றங்கள் அனைத்தும் அரசியல் சங்கீதக் கதிரை விளையாட்டுகளாக காணப்படுகின்றன.
சங்கீதக் கதிரை விளையாட்டுக்களால் ஆர்ப்பாட்டக்காரர்களை திருப்திப்படுத்த முடியவில்லை என்பதோடு மகா சங்கத்தையும் திருப்திப்படுத்த முடியவில்லை என்பதுதான் இப்போதுள்ள நிலைமையாகும். அதனால்தான் மகாசங்கம் நிர்ணயகரமான விதத்தில் தலையீடு செய்யும் ஒரு நிலைமை தோன்றியது.
மகாநாயக்கர்கள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்ட பிரகாரம் ஓர் இடைக்கால ஏற்பாட்டை செய்வதாக இருந்தாலும் எதிர்க்கட்சிகளை சம்மதிக்க செய்யும் வேலையையும் மகா சங்கம்தான் செய்ய வேண்டியிருக்கும். அவ்வாறு செய்து ஒரு இடைக்கால ஏற்பாட்டுக்கு போக முடிந்தால், அதன்பின் மகாசங்கம் மேலும் ஒரு காரியத்தை செய்ய வேண்டியிருக்கும். அது என்னவென்றால் காலிமுகத்திடலில் கிராமம் அமைத்து போராடிக் கொண்டிருக்கும் ஒரு புதிய தலைமுறையோடு உரையாடுவது.
இங்கேயும் சவால்கள் உண்டு. ஏனென்றால் மக்கள் பிரதிநிதிகளாக காணப்படும் அரசியல்வாதிகள் நடிப்புக்காவது பௌத்த பீடங்களுக்கு பணிவார்கள்.தமது வாக்காளர்களை திருப்திப்படுத்துவதற்காக அவர்கள் அதை ஒரு சடங்கு போலாவது செய்யத் தயார்.சிங்கள பௌத்த அரசியலின் தவிர்க்கப்பட முடியாத ஒரு சடங்கு அது.
ஆனால் இப்பொழுது பிரச்சினை என்னவென்றால், காலிமுகத்திடலில் கிராமம் அமைத்துப் போராடி வரும் ஒரு புதிய தலைமுறை அதே சிங்கள-பௌத்த உணர்வுகளை பின்பற்றுமா என்பதுதான்.
சங்கப் பிரகடனத்திற்கு கீழ்படிந்து அரசியல்வாதிகள் ஏதும் இடைக்கால ஏற்பாட்டுக்கு போவார்களாக இருந்தால் அடுத்தகட்டமாக காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம் செய்பவர்களோடு மகாசங்கம்தான் உரையாட வேண்டிவரலாம் அப்படி ஒரு நிலை வந்தால் அது இப்புதிய தலைமுறை மீது மகாசங்கம் செல்வாக்கு செலுத்தக் கூடிய நிலைமைகள் உண்டா இல்லையா என்பதை தீர்மானிக்கும் ஒரு தருணமாக அமையும்
எதுவாயினும் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளால் பிரச்சினையை தீர்க்க முடியாத ஒரு ஒரு கட்டத்தில் மதத் தலைவர்கள் தலையிட வேண்டிய ஒரு நிலைமை இலங்கைத் தீவின் அரசியலில் ஏற்பட்டிருக்கிறது. மதத் தலைவர்களின் தலையீடு என்பது நல்லதைச் செய்யும் என்றால் அதை வரவேற்க வேண்டும். 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் போது, மாளுவ சோபித தேரர் அப்படியொரு பாத்திரத்தை வகித்தார்.
ஆட்சி மாற்றத்திற்கான எதிர்க்கட்சிகளின் ஐக்கிய முன்னணிக்கு அவர் ஆன்மபலமாகத் திகழ்ந்தார் என்று கூறப்படுகிறது. அக்காலகட்டத்தில் அவருடைய பங்களிப்புப்பற்றி கூறும்பொழுது கலாநிதி ஜெயதேவ உயாங்கொட, அது அரசியலின் மீது சிவில் சமூகங்களின் தார்மீகத் தலையீடு என்று சொன்னார். இப்பொழுது மகா சங்கம் தலையிட்டிருக்கிறது அது எத்தகையதொரு தலையீடாக அமையும் ?
-நிலாந்தன்-