இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
அத்துடன், திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத வேதனமும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்க தமிழக அரசுக்கு இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில், அறிக்கை ஒன்றினை நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனை அறிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது நிலவிவரும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40,000 டன் அரிசி, 500 டன் பால்மா மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளன.
இந்த சூழ்நிலையில் மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நன்கொடைகள் வழங்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குவோர் 80-ஜி ன் கீழ் வருமான வரி விலக்கு பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.