சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அறிவிப்பு காரணமாக புதிய பிரதி சபாநாயகர் தெரிவில் குழப்பநிலை ஏற்பட்டிருந்ததுடன், அமைதியின்மையும் ஏற்பட்டிருந்தது.
இன்று காலை நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகியிருந்த நிலையில், கேள்வி நேரத்தினைத் தொடர்ந்து புதிய பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளமை குறித்த அறிவிப்பினை சபாநாயகர் வெளியிட்டார்.
இதன்போது கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் பெயர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்மொழியப்பட்டதுடன், சுசில் பிரேமஜயந்தவினால் வழிமொழியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கு ஆதரவளிப்பதாக அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் அறிவித்திருந்தார்.
அதேநேரம், பிரதி சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார முன்மொழிந்திருந்த நிலையில், லக்ஷ்மன் கிரியெல்ல வழிமொழிந்திருந்தார்.
இதனையடுத்து, பிரதி சபாநாயகர் பதவிக்கு இரு வேட்புமனு தாக்கல் செய்தமையால் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என சபாநாயகர் அறிவித்தார்.
குறிப்பாக வாக்களிக்கும் போது, வாக்களிக்கும் நபரின் பெயரை குறிப்பிட்டு வாக்குச்சீட்டில் தங்களது கையொப்பத்தினையிட வேண்டும் என சபாநாயகர் குறிப்பிட்டார்.
இதற்கு எதிர்கட்சியினர் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டனர். குறிப்பாக ஆளும் தரப்பிலுள்ள பலரும் தங்களுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும், இதனால் கையொப்பமிடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.
எனினும், எதிர்கட்சியினரின் கோரிக்கையினை ஏற்றுக்கொள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மறுப்பு தெரிவித்தார். நாடாளுமன்ற வழமைக்கு மாறாக நடந்து கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதன்போது அங்கு கருத்து வெளியிட்ட வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜயசேகர, கடந்த 2015ஆம் ஆண்டும் இவ்வாறே வாக்கெடுப்பு நடைபெற்றது என சுட்டிக்காட்டினார்.
இதன்காரணமாக சபையில் குழப்பநிலை ஏற்பட்டிருந்தமையினை அவதானிக்க முடிந்தது.
எது எவ்வாறு இருப்பினும் சபாநாயகர் முன்னர் அறிவித்ததன் பிரகாரமே புதிய பிரதி சபாநாயகரை தெரியும் வாக்கெடுப்பு நடைபெற்று வருகின்றது.
இதேவேளை, ரஞ்சித் சியம்பலாபிட்டியவே இதற்கு முன்னரும் பிரதி சபாநாயகராக செயப்பட்டிருந்தார். எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்தமையினை தொடர்ந்து பதவி விலகுவதாக அறிவித்திருந்தார்.
எனினும், தற்போது அவரது பெயர் மீண்டும் பிரதி சாபநாயகர் பதவிக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.