அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை இணைய வழியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3.00 மணிக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு மெய்நிகர் முறைமை ஊடாக (Zoom) நடைபெறவுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது.
முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட மாட்டாது என சபாநாயகர் அறிவித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து, கட்சித் தலைவர்கள் கூட்டத்தை மெய்நிகர் முறைமை ஊடாக தாமதமின்றி நடத்துமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.