ஜனாதிபதி பதவி விலகினால் மாத்திரமே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வார் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் விவாதிக்க திட்டமிடப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று அது குறித்து விவாதிக்கப்படும் என கூறியுள்ளார்.
அத்தோடு, ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்த நாடாளுமன்ற அமர்வில் விவாதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும், அதன் பின்னர் சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்கத் தயார் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகளின் உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்க முடியாத ஜனாதிபதி ஒருவரின் இருப்பை மக்கள் கேள்விக்குள்ளாக்குகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.