நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்புரிமையின் கீழ் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தைப் பறிக்க எவருக்கும் உரிமை இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய அவர், “இதுவரை ஊடக சுதந்திரம் இருந்தது. நாங்கள் அனைவரும் கமிட்டி அறைகளில் இருந்து வெளியே வந்து ஊடக அறிக்கைகளை கொடுத்துள்ளோம். என்னிடம் ஆதாரம் உள்ளது.
எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊடகவியலாளர்களிடமிருந்து தொலைபேசிகளை பறிப்பதற்கு எந்த உரிமையும் இல்லை.
நீங்கள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சுற்றறிக்கைகளில் ஒன்றைக் காட்டி இதை மறைக்க வேண்டாம். இது முற்றிலும் தவறானது. தேவைப்பட்டால் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபைக்கு வந்து மன்னிப்பு கேட்டு இதை முடித்துக்கொள்ளலாம்.
எனவே, ஊடகவியலாளர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் கைகளைத் தொட எவருக்கும் உரிமை இல்லை என நான் கோருகின்றேன். ஜனாதிபதிக்கு எந்த உரிமையும் இல்லை. பிரதமருக்கு உரிமை இல்லை. எதிர்க்கட்சித் தலைவருக்குக் கூட உரிமை இல்லை. 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எந்த உரிமையும் இல்லை.
சுதந்திர ஊடகத்தை காப்பாற்ற நாம் பாடுபட வேண்டும். எனவே, இதை விதிமுறைகளால் மறைக்க வேண்டாம். தயவுசெய்து அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை வந்து மன்னிப்பு கேட்கச்சொல்லுங்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரினால் இரண்டு ஊடகவியலாளர்களின் கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டார்.
இரண்டு ஊடகவியலாளர்களும் நாடாளுமன்றத்தில் செய்தி சேகரிக்க வந்ததாகவும், ஆனால் குழுக் கூட்டங்களின் முடிவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல்களைப் பெறுவதற்கு சேர்ஜண்டின் விசேட அனுமதிப் பத்திரம் பெறப்பட வேண்டும் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.
சம்பவம் இடம்பெற்ற போது அவ்வாறான விசேட அனுமதிப்பத்திரங்கள் இரண்டு ஊடகவியலாளர்களுக்கும் இல்லை எனவும், அவர்கள் அங்கீகரிக்கப்படாத இடத்தில் இருந்து பணியை மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.