இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது.
சட்டோகிராம் மைதானத்தில் கடந்த 15ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, முதல் இன்னிங்ஸிற்காக 397 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அஞ்சலோ மத்தியூஸ் 199 ஓட்டங்களையும் சந்திமால் 66 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், நயீம் 6 விக்கெட்டுகளையும் சகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளையும் தைஜூல் இஸ்லாம் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய பங்களாதேஷ் அணி, 465 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டமீம் இக்பால் 133 ஓட்டங்களையும் முஷ்பிகுர் ரஹீம் 105 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலக்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், கசுன் ராஜித 4 விக்கெட்டுகளையும் அசித்த பெனார்டோ 3 விக்கெட்டுகளையும் எம்புல்தெனிய மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 68 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, இன்றைய போட்டியின் இறுதிநாள் வரை 260 ஓட்டங்களை பெற்று 6 விக்கெட்டுகளை இழந்து களத்தில் இருந்தது. இதனால் போட்டி வெற்றி-தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நிரோஷன் டிக்வெல்ல ஆட்டமிழக்காது 61 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், தைஜூல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளையும் சகிப் அல் ஹசன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக முதல் இன்னிங்ஸில் ஒரு ஓட்டத்தால் இரட்டை சதத்தை தவறவிட்ட அஞ்சலோ மத்தியூஸ் தெரிவுசெய்யப்பட்டார்.