கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் போது தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் கடந்த 16ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9ஆம் திகதி பெரஹெர மாவத்தை – பிஷொப் கல்லூரி கேட்போர் கூட வளாகத்தின் நடைபாதையில் காயமடைந்திருந்த நிலையில் குறித்த நபர் ஊடகவியலாளர்கள் சிலரால் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அன்றைய தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நிலவிய பதற்ற நிலை காரணமாகவே குறித்த நபர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு ராகமை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே கடந்த 16 ஆம் திகதி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 47 வயதுடைய குளியாப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தலை மற்றும் மார்பகப்பகுதியில் ஏற்பட்ட ஆழமான காயமே இவரது உயிரிழப்பிற்கான காரணம் என மரண பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை தொடர்பில் கொள்ளுபிட்டிய பொலிஸாரினால் கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.