இந்த வார இறுதியில் கனடாவின் அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டு மாகாணங்களில் சக்திவாய்ந்த இடியுடன் கூடிய மழையால் ஏற்பட்ட புயலால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 8ஆக உயர்ந்துள்ளது.
மேலும், அரை மில்லியன் மக்களுக்கு மின்சாரத்தை மீட்டெடுப்பதற்காக அவசரகால குழுவினர் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை பிற்பகல் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த புயல்கள் மற்றும் சூறாவளியினால், ஒன்ராறியோ மற்றும் கியூபெக்கின் சில பகுதிகளில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டன.
மணிக்கு 132 கிமீ (82 மைல்) வேகத்தில் வீசிய காற்று, மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் என அனைத்தையும் அடியோடு சாய்த்தது.
இந்த நிலையில், தேவைப்படுபவர்களுக்கு உதவ மத்திய அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
‘பாதிக்கப்பட்ட அனைவரையும் நாங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறோம், மேலும் மின்சாரத்தை மீட்டெடுக்க உழைக்கும் குழுவினருக்கு நன்றி’ என்று ட்ரூடோ ட்வீட் செய்தார்.
ஒன்ராறியோவின் மிகப்பெரிய மின்சார விநியோக நிறுவனமான ஹைட்ரோ ஒன் நிறுவனத்தின் குழுவினர், 360,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மின்சாரத்தை மீட்டெடுத்துள்ளனர். 226,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாமல் உள்ளனர் என்று நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மின்சாரம் மீண்டும் வழங்கப்படுவதற்கு முன்பு, மறுசீரமைப்பு முயற்சிகள் பல நாட்களுக்கு தொடரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.