கொழும்பு – கொள்ளுப்பிட்டி மற்று காலிமுகத்திடலில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரம் தொடர்பாக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சுதந்திரமாக செயற்படுவதாக அறிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சம் மற்றும் அடக்குமுறை மற்றும் சர்வதேச ரீதியில் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட களங்கம் மிகவும் வலுவானவை என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்றைய தினம் நாடு முழுவதும் இடம்பெற்ற வன்முறைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வன்முறைக்கான அடிப்படைக் காரணம், அதற்குக் கட்டளையிட்டவர்கள், திட்டமிடுபவர்கள் மற்றும் அதைச் செய்தவர்கள் யார் என்பதை நாட்டின் முன் அம்பலப்படுத்த வேண்டும் என அவர்கள் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் இந்த நிலை மீண்டும் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர.
இந்தக் கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, அத்துரலியே இரத்தின தேரர், கெவிந்து குமாரதுங்க, ஏ.எல்.எம். அதாவுல்லா, வாசுதேவ நாணயக்கார மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோர் கையெழுத்திட்டிருந்தனர்.