ஐ.பி.எல். ரி-20 தொடரின் இறுதிப் போட்டிக்கான வெளியேற்றுப் போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கான இரண்டாவது தகுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, நாளை (வெள்ளிக்கிழமை) அஹமதாபாத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி, எதிர்வரும் 29ஆம் திகதி அஹமதாபாத்தில் நடைபெறும் மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், குஜராத் டைடன்ஸ் அணியுடன் மோதவுள்ளது.
கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ராஜட் படிதார் ஆட்டமிழக்காது 112 ஓட்டங்களையும் தினேஷ் கார்திக் ஆட்டமிழக்காது 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணியின் பந்துவீச்சில், மோஷின் கான், குர்ணல் பாண்ட்யா, அவிஷ்கான் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 208 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்;டுகள் இழப்புக்கு 193 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கே.எல். ராகுல் 79 ஓட்டங்களையும் தீபக் ஹூடா 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்துவீச்சில், ஜோஸ் ஹெசில்வுட் 3 விக்கெட்டுகளையும் மொஹமட் சிராஜ், வனிந்து ஹசரங்க மற்றும் ஹர்சல் பட்டேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக தனது முதல் ஐ.பி.எல். சதத்தை பதிவு செய்த ராஜட் படிதார் தெரிவுசெய்யப்பட்டார்.