இலங்கைத் தீவின் அத்தியாவசியத் தேவைகளுக்கான நெருக்கடிகள் மேலும் மேலும் தீவிரமடைந்து வருகின்றன. புதிய அரசாங்கம் பதவியேற்றாலும் ‘வரிசை யுகம்’ இன்னமும் நீடிப்பதாகவே உள்ளது.
போராட்டங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. மக்களின் கோரிக்கைகள் முழுமையாக தீர்க்கப்படவில்லை. அதற்கான சக்தியும் இலங்கையிடத்தில் தற்போதைக்கு இல்லை.
இலங்கையில் உள்ள அரச ஊழியர்களுக்கு கூட சம்பளம் வழங்குவதற்கு முடியாது தற்போது பணத்தாள்களை அச்சிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த மே மாத இறுதியில் கூட பணம் அச்சிட்டே அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படவுள்ளது.
இவ்வாறிருக்கையில், 14 வகையான மருத்துவப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் நீடிக்கின்றன. குறிப்பாக, இருதய நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள், சத்திர சிகிச்சைக்குத் தேவையான சிகிச்சை உபகரணங்கள் உட்பட பல மருத்துவ மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது.
அதனைவிடவும், மருத்துவ மருந்துகள், சத்திர சிகிச்சை உபகரணங்கள் மற்றும் தேவையான உணவுகளை வழங்கும் வழங்குநர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக கட்டணம் செலுத்தப்படவில்லை என்பதோடு நிலுவை தொகை 34 பில்லியன் ரூபாய்களாக உள்ளது.
இதனைவிடவும், நாட்டில் நாளென்றுக்கு 50 இலட்சம் கிலோ முதல் 60 இலட்சம் கிலோ வரையில் அரிசி நுகரப்படுகிறது. அவ்வரிசியை உற்பத்தி செய்வதற்கு நாளொன்றுக்கு ஒரு கோடி கிலோ நெல் வேண்டும். அதனடிப்படையில் மேலும் 5 மாதங்களுக்கு தேவையான நெல் இலங்கையில் உள்ளது. அத்துடன், அரசாங்கத்திடம் 50 இலட்சம் கிலோ அரிசி மட்டுமே இருப்பில் உள்ளது. அது ஒரு நாளைக்கு கூட போதாத நிலைமையும் காணப்படுகின்றது.
மேலும், இந்தியா ஏற்கனவே இலங்கையின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வழங்கிய 500 மில்லியன் கடன் தொகையின் கீழ் எதிர்வரும் 29ஆம் திகதி பெற்றோர் கப்பலொன்றும், ஜுன் முதலாம் திகதி டீசல் கப்பலொன்றும் வருகை தரவுள்ளன. அவையே இறுதியாக இந்திய கடனுதவியின் வருகை தரவுள்ள கப்பல்களாகவும் உள்ளன.
அத்தோடு, நாட்டின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதாக இருந்தால் மேலதிகமான நிதி தேவையாகவுள்ளது. தற்போது கிடைக்கும் எரிபொருளுக்கு அமைவாக நான்கில் ஒரு மடங்கு மின்சாரத்தினையே உற்பத்தி செய்வதற்கு இயலுமான நிலைமையே காணப்படுகின்றது.
அதேபோன்று நாட்டில் ஏற்கனவே நாளொன்றுக்கு 12 மில்லியன் சமையல் எரிவாயு கொள்கலன்கள் பற்றாக்குறையாக காணப்படுகின்ற நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு நெருக்கடியை போக்குவதாக இருந்தால் ஆகக்குறைந்தது 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியமாகின்றது.
நாட்டின் வரலாற்றில் 1980ஆம் ஆண்டு 32.50சதவீதமாக பணவீக்கம் அதியுச்சத்தைப் பெற்றுக் காணப்பட்டது. தற்போது அதனை தாண்டி 33.80சதவீதத்தினை பணவீக்கம் தொட்டுள்ளது. இதனை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இவ்வாறு இலங்கையின் தற்போதைய நிலைமைகள் உள்ளன. அடுத்த மாதம் எவ்வாறு நகரப்போகின்றது என்பதே கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையில் தான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட அரசியல் தரப்பினரால் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப்பொருட்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.
அதில், 9,000 மெற்றிக் தொன் அரிசி, 50 தொன் பால் மா மற்றும் 25 தொன் மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவற்றை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.
அந்நிலையில், பிரதமர் அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ், உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் கிராம உத்தியோகத்தர்களூடாக இந்த நிவாரணப் பொருட்களை விநியோகிக்கப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு முதற்கட்டமாக கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களிலும் அதன் பின்னர் வடக்கு, கிழக்கு, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து இவ்விதமான நிவாரணப்பொருட்கள் இலங்கைக்கு கிடைப்பது இது முதற்தடவையல்ல. இதற்கு முன்னரும், 1987ஆம் ஆண்டு ஒபரேசன் பூமாலை நடைபெற்றபோது இந்தியா விமானங்கள் மூலமாக வடக்கிற்கு உலர் உணவுப்பொருட்களை வழங்கியது.
பின்னர், படகுகள் மூலமாக செஞ்சிலுவைப் பிரிவின் துணையுடன் அத்தியாவசியப்பொருட்களை வழங்கியது. ஆனால் அப்போது காணப்பட்ட நிலைமைகளும் தற்போது காணப்படுகின்ற நிலைமைகளும் முற்றிலும் மறுபட்டவை.
இவ்வாறிருக்க, அடுத்துவரும் மாதங்களில் ஏற்படவுள்ள நெருக்கடிகளைப் போக்குவதற்காக இந்திய அரசாங்கத்திடமிருந்து மேலும் 4 பில்லியன் டொலர்கள் உதவி கிடைக்குமென எதிர்பார்க்கப்படுவதாக அத்தியாவசிய உணவுப்பொருள் விநியோகக் குழுவின் தலைவரான முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
அத்துடன், அதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடும் அவர் இந்த பேச்சுவார்த்தைக்காக இலங்கை பிரதிநிதியொருவர் இந்தியாவுக்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டுக்குத் தேவையான பெற்றோலியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியின் ஒத்துழைப்புடன் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் குறுகியகாலக் கடன் வசதியும், இந்திய அரச வங்கியின் ஒத்துழைப்பின் கீழ், மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வசதியையும் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தினை விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர சமர்ப்பித்திருந்தார்.
முன்னதாக, இந்தியா இலங்கையின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான 2.4 பில்லின் டொலர்களை வழங்கியிருந்தது. ‘அயலகத்திற்கு முன்னுரிமை’ என்ற பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனைக்கு அமைவாக அந்த தொகை வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில், அடுத்து வரும் காலத்தில் பொருளாதார நெருக்கடிகளால் தத்தளிக்கும் இலங்கையை காப்பாற்றுவதற்காக நிச்சயம் கைகொடுக்கம் என்று பாரிய நம்பிக்கை கொள்ளலாம். அல்லல் படும் மக்களின் எதிர்பார்ப்பும் அதுவாகவே உள்ளது.
-யே.பெனிற்லஸ்-