ஆளுங்கட்சி நாடாளுமன்ற குழுவின் விசேட கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் முதல் தடவையாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் புதிய அமைச்சரவையின் அமைச்சர்களும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத், “இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடியை ஒன்றாக எடுத்துக் கொள்வது அல்லது ஒரு நெருக்கடியைத் தீர்த்து மற்றொன்றிற்குச் செல்வதுதான் அடிப்படை யோசனையாக இருந்தது.
ஆனால் இரண்டு கருத்துக்களையும் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.
குறிப்பாக, நமது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியும், அரசியல் நெருக்கடியும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை என்று நான் நம்புகிறேன்.
எனவே, இந்தப் புதிய அரசியலமைப்பு பொருளாதாரத்தை மீட்டெடுப்பது போல் அரசியல் ரீதியாகவும் விரைவாகக் கொண்டுவரப்பட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்” என தெரிவித்துள்ளார்.