வடக்கு நேபாளத்தில் விழுந்து நொறுங்கிய விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து, இதுவரை 21 உடல்களை மீட்புக்குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
மீட்புப் பணியாளர்கள் கடினமான மலை நிலப்பரப்பில் இருந்து மேலும் ஒருவரை தேடும் பணியினை முடுக்கிவிட்டுள்ளதாக நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தியோ சந்திர லால் கர்ன் தெரிவித்துள்ளார்.
நேபாள விமானச் சேவை நிறுவனமான தாரா எயார் மூலம் இயக்கப்படும் விமானத்தின் சிதைவுகள் முஸ்டாங் மாவட்டத்தில் மீட்கப்பட்டுள்ளன.
நான்கு இந்தியர்கள், இரண்டு ஜேர்மன் மற்றும் 16 நேபாளிகள் விமானத்தில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மோசமான வானிலை மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்பு காரணமாக தேடுதல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கனேடிய விமான நிறுவனமான டி ஹவில்லாண்ட் தயாரித்த விமானம், ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 09.55 மணிக்கு சுற்றுலா நகரமான போகாராவில் இருந்து புறப்பட்டது. இது ஒரு பிரபலமான சுற்றுலா மற்றும் யாத்திரைத் தளமான ஜோம்ஸம் நோக்கிச் சென்றது.
எனினும், விமானம் 20 நிமிட பயணத்தில் இருந்தபோது, தரையிறங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடனான தொடர்பை இழந்தது.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த குழு ஒன்றை அமைத்துள்ளதாக நேபாள அரசாங்கம் தெரிவித்துள்ளது.