போதைப்பொருள் விவகாரத்தினாலேயே தங்காலையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தங்காலை – மொரகட்டியார பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்திருந்ததுடன், 2 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், கெப் ரக வாகனம் ஒன்றினை இலக்கு வைத்து உந்துருளியில் பிரவேசித்தவர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் கெப் ரக வாகனத்தை செலுத்திய தங்காலை – குடாவெல்ல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவர், போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு இடையிலான தனிப்பட்ட முரண்பாடு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.