காலி முகத்திடலுக்கு மக்கள் வருகைத் தருவது கொஞ்சம் குறைவடைந்துவிட்டதால், அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் முடிவடைந்துவிட்டதாக கருதக்கூடாது என்றும் மக்களின் அடுத்தக்கட்டப் போராட்டங்கள் சுனாமியின் தாக்கத்தைவிட தீவிரமாக இருக்கும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இரண்டு வருடங்களாக நாட்டை நாசமாக்கிவிட்டு, இப்போது நாடு சிக்கலில் உள்ளது என ஆளும் தரப்பினர் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
பிரதமராக ரணில் வந்தால், வெளிநாடுகளில் இருந்து உதவிகள் கிடைக்கும் என்றார்கள். ஆனால், எங்கே கிடைத்தது?
இனவாதத்தை பரப்பி பகைத்துக் கொண்டுள்ள மத்திய கிழக்கு நாடுகளுடன் தான் இறுதியாக பேச்சு நடத்த வேண்டியுள்ளது.
அந்த நாடுகளுடன் பேச்சு நடத்தி, உதவிகளைக் பெற்றுக் கொள்ளுங்கள். எண்ணெய்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
உலக வங்கியிருடமிருந்து 79 மில்லியன் டொலரும், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 83 மில்லியன் டொலரும் கிடைத்துள்ளன.
இதனை வைத்து உறம், எரிபொருள், எரிவாயு, மருந்துப் பிரச்சினையை தீர்த்தால், மக்களுக்குள்ள சிக்கல் இல்லாது போய்விடும்.
நாடும் பழைய நிலைமைக்கு வந்துவிடும். சுற்றுலாப் பயணிகளும் மீண்டும் வர ஆரம்பித்துவிடுவார்கள். இதனால் மாதத்திற்கு 250 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கும். இதனால் ரூபாயின் பெறுமதியும் உயரும்.
எனவே, முடியாது எனக்கூறிக்கொண்டிருக்காமல், செய்ய வேண்டிய விடயங்களை உடனடியாக செய்யுங்கள்.
காலி முகத்திடலில் கூட்டம் கொஞ்சம் குறைந்தவுடன், மக்கள் போராட்டம் முடிந்துவிட்டது என சிலர் இன்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், மக்களின் மனங்களில் இன்னமும் போராட்டங்கள் ஓயவில்லை. மக்களின் இந்தப் போராட்டகள் பெரிதானால் இரண்டாவது தடவையாக சுனாமி ஏற்பட்டால் எவ்வாறு இருக்குமோ அவ்வாறானதொரு நிலைமையை கட்சி பேதங்கள் கடந்து அனைவரும் முகம் கொடுக்க நேரிடும்.
இந்த யதார்த்தத்தைப் புரிந்துக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட வேண்டும். மக்கள் திருடர்களை பிடிக்குமாறும் திருடப்பட்ட நிதியை நாட்டுக்குள் கொண்டுவருமாறும் கோருகிறார்கள்.
எனவே, புதிய பிரதமர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என கேட்க விரும்புகிறோம். பண்டோரா ஆவன குற்றச்சாட்டில் சிக்கியுள்ள திருக்குமார் நடேசனை கைது செய்வீர்களா?
நாட்டின் இந்த பொருளாதார நிலைமைக்கு முக்கிய சூத்திரதாரிகளாகக் காணப்படும் பீ.பி.ஜயசுந்தர மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ராலை சிறையில் அடைப்பீர்களா?
அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுப்பீர்களா? இவற்றுக்கு எமக்கு பிரதமரிடமிருந்து பதில் வேண்டும்.