ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ இன்று (வியாழக்கிழமை) தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள அவர், தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து அவர் விளக்கமளிக்க மறுத்துவிட்டதாகவும் எவ்வாறிருப்பினும் அரசியலில் தொடர்ந்தும் இருப்பேன் என்றும் கூறியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நாடாளுமன்ற அரசியலில் தனக்கு ஆர்வம் இல்லை என்று அவர் மீண்டும் வலியுறுத்தியதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்றையதினம் காலை இடம்பெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தனது இராஜினாமா குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
21ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்டால், இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வகிக்கவோ அல்லது எதிர்காலத் தேர்தலில் போட்டியிடவோ முடியாது என்ற சரத்து அந்தத் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
எனவே, 21ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்டால் பசில் ராஜபக்ஷ எப்படியும் பதவி விலக நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், பசில் ராஜபக்ஷ பதவி விலகினால், அவரது வெறிறிடத்திற்கு வர்த்தக அதிபர் தம்மிக்க பெரேரா அல்லது கொழும்பு மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் ரேணுகா பெரேரா ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படுவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.