எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுவது போன்று 35% தள்ளுபடியுடன் இலங்கைக்கு எரிபொருளை வழங்க ரஷ்யா முன்வரவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
தாம் ரஷ்ய தூதுவரை சந்தித்து இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடியதாகவும் அவ்வாறானதொரு பிரேரணையை தாம் ஒருபோதும் முன்வைக்கவில்லை என அவர் தெரிவித்ததாகவும் அவர் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
35% சலுகை விலையில் எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா முன்வந்த போதிலும் ரஷ்யாவிடம் இருந்து ஏன் எரிபொருளை கொள்வனவு செய்யவில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ரஷ்ய அரசாங்கம் எரிபொருள் வர்த்தகத்தில் நேரடியாக ஈடுபடவில்லை என ரஷ்ய தூதுவர் தன்னிடம் தெரிவித்ததாகவும் எரிபொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நான்கு ரஷ்ய நிறுவனங்களின் பட்டியலை அவர் தன்னிடம் வழங்கியதாகவும் அமைச்சர் கூறினார்.
தான் தனிப்பட்ட முறையில் அந்த நான்கு நிறுவனங்களில், இரண்டு நிறுவனங்களுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தனக்கு தொடர்புகள் இருந்தால் ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எரிபொருளை பெற்றுத்தர மத்தியஸ்தம் செய்யுமாறு அவர் வாசுதேவ நாணயக்காரவிடம் கோரிக்கை விடுத்தார்.