நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 2 ஆயிரத்து 637 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் ஆயிரத்து 52 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் மற்றும் 10ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 856 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 27 சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதுடன் அவர்களில் நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நிட்டம்புவ பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை 29 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கியமை தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தாக்கப்பட்டமை தொடர்பில் ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோன்று குறித்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.