வடகொரியா மீண்டும் ஒரு புதிய அணுசக்தி சோதனையை நடத்துவதை தாங்கள் விரும்பவில்லை என சீனா தெரிவித்துள்ளது.
வடகொரியா எந்த நேரமும் அணு ஆயுத சோதனையை முன்னெடுக்கலாம் என அமெரிக்க எச்சரித்திருந்த நிலையில், சீனாவின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஐ.நாவுக்கான சீன தூதர் ஜோங் ஜுன் கூறுகையில், ‘வடகொரியா மீண்டும் ஒரு புதிய அணுசக்தி சோதனையை நடத்துவதை நாங்கள் விரும்பவில்லை. அணு ஆயுத ஒழிப்பு என்பது சீனாவின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும்.
நாங்கள் வடகொரியாவிம் மற்றொரு சோதனையை பார்க்க விரும்பவில்லை. என்ன நடக்கும் என்று பொறுந்திருந்து பார்ப்போம். ஆனால், என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன்,
மேலும், வடகொரியா மீதான ஒருதலைப்பட்ச பொருளாதாரத் தடைகளை தளர்த்தவும், தென் கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சியை நிறுத்தவும் நாங்கள் வலியுறுத்துகிறோம்’ என கூறினார்.
2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து வடகொரியா இதுவரை 10 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது.
கொரோனா காரணமாக மோசமான நிலையை அடைந்துள்ள பொருளாதாரத்தைக் கவனிக்காமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேம்படுத்துவதிலேயே கவனம் செலுத்துகின்றமை பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.