வெள்ளிக்கிழமை விடுமுறையை வீட்டுத் தோட்டம் மற்றும் சுற்றுச்சூழலை சுத்தம் செய்ய பயன்படுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
டெங்கு தொற்று மற்றும் நுளம்பு பெருகும் இடங்கள் அதிகரித்து வருவதால், இவ்வாறு சுற்றுச்சூழலை சுத்தம் செய்யுமாறு அந்தச் சங்கத்தின் உறுப்பினர் பிரசாத் கொலம்பகே ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது, இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2020ஆம் ஆண்டில், 31,000 டெங்கு வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் ஆனால் கடந்த ஆறு மாதங்களில் மாத்திரம் 25,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்குகளில் பெரும்பாலானவை மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளன என்றும் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் அதிக வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பினால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த அபாயம் குறித்து மக்கள் மற்றும் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் இல்லையெனில், எதிர்காலத்தில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளில் டெங்கு பரவல் தொடர்பாக கவனம் செலுத்தத் தவறியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள வெள்ளிக்கிழமை விடுமுறையை மக்கள் தங்கள் சொந்த தோட்டங்களையும் சுற்றியுள்ள சூழலையும் சுத்தம் செய்ய அன்றைய நாளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் வெள்ளிக்கிழமை விடுமுறையை தெரிவித்துள்ளார்.