ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு தங்களது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் 4 முக்கிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் அந்த நாட்டுக்கு விஜயம் செய்துள்ளனர்.
போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனிக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன்;ங், ஜேர்மனி அதிபர் ஒலாஃப் ஷோல்ஸ், இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி, ருமேனியா ஜனாதிபதி க்ளாஸ் லொஹானிஸ் ஆகியோர் நேற்று (வியாழக்கிழமை) விஜயம் செய்தனர்.
போலந்திலிருந்து வீதி வழியாக தலைநகர் கீவ்வுக்கு வந்த அவர்கள், ரஷ்யப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து, பின்னர் அவர்கள் பின்வாங்கிச் சென்ற பகுதிகளைப் பார்வையிட்டனர்.
முதலில் கீவ் பகுதியான இர்பின் சென்று பார்வையிட்ட அந்தத் தலைவர்கள், மிக மோசமான போர்க் குற்றங்கள் நடைபெற்றதாகக் கூறப்படும் புச்சா நகருக்கு சென்றனர்.
அப்போது பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன்;ங், கீவ் புகர்ப் பகுதிகளில் ரஷ்யப் படையினர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதற்கான அடையாளங்கள் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், ரஷ்யர்கள் நடத்திய படுகொலைகள் கடுமையான கண்டத்துக்குரியவை என்று அவர் கூறினார்.
இர்பின் நகரில் ரஷ்யப் படையினர் ஈவிரக்கமில்லாமல் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், கீவ் நகரைக் கைப்பற்றும் ரஷ்யப் படையினரின் திட்டத்தை முறியடித்ததற்காக இர்பின் மற்றும் மற்ற புகர்ப் பகுதி மக்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
அவர்களது சுற்றுப் பயணத்தின்போது உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் ஸெலென்க்ஸியும் உடனிருந்தார்.