இந்தியாவிற்கு அப்பால் புதிய வணிக விமானங்களை ஈர்க்கும் திட்டத்துடன், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜூலை 1ஆம் திகதி முதல் மீண்டும் சர்வதேச விமானங்களை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை ஆய்வுச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
இதன்போது, ஜூலை 1 முதல் சர்வதேச விமானங்களை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் மற்றும் சர்வதேச விமான நிறுவன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பலாலி விமான நிலையம் இந்தியாவின் ஆதரவுடன் மீள் அபிவிருத்தி செய்யப்பட்டதைத் தொடர்ந்து 2019 இல் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக மீண்டும் திறக்கப்பட்டது.
ஆரம்பத்தில், இந்தியாவின் எலையன்ஸ் ஏர் சென்னையில் இருந்து பலாலிக்கு வாரந்தோறும் மூன்று விமானங்களை நடத்தியது. இருப்பினும் ஆண்டின் இறுதியில் அது திடீரென நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், சர்வதேச விமான நிலையமாக தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்கும் இந்தியாவிற்கு அப்பால் புதிய இடங்களுக்கு பறக்கும் விமான நிறுவனங்களை கவரும் வகையில் இந்த விமான நிலையம் நவீனமயமாக்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும் என்று டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.
தற்போதுள்ள ஓடுபாதையில் 75 இருக்கைகள் கொண்ட விமானங்கள் மட்டுமே பயணிக்க முடியும் என்பதால், இந்திய உதவியுடன் ஓடுபாதையை விரிவுபடுத்துவதற்கான அடிப்படை பணிகளை தொடங்க விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், விமான நிலைய வளாகத்தில் டியூட்டி ஃப்ரீ மையத்தை ஏற்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தியுடன், யாழ். குடாநாட்டிற்குத் திரும்பவும் வளர்ந்து வரும் வர்த்தக வாய்ப்புகளில் முதலீடு செய்யவும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு டி சில்வா பகிரங்க அழைப்பை விடுத்துள்ளார்.