சாய்ந்தமருது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முறைகேடாக எரிபொருள் விநியோகம் நடைபெறுவதாகவும் இவ்விடயங்களில் பிரதேச செயலகம் பாராமுகமாக இருப்பதாகவும் தெரிவித்து சாய்ந்தமருது இளைஞர்கள் தலைமையிலான குழுவினர், இன்று சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக்கை அலுவலகத்தில் சந்தித்தனர்.
எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்தோரே இந்த எரிபொருள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
இரவு நேரங்களில் முறைகேடாக எரிபொருள் வழங்கப்படுவதாகவும், பாதுகாப்புக்கு நிற்கும் பாதுகாப்புப் படையினர் இந்த செயலுக்கு துணைபோவதாகவும் இவர்கள் குறிப்பிட்டனர்.
பொதுமக்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு ஒரு முறையான பொறிமுறையை உருவாக்குமாறும், இந்த விடயத்தை கையாள முடியுமான உதவிகளை வழங்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.
நேற்று நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை எரிபொருள் கேட்டும் எரிபொருள் வழங்கப்படாமையினால் நீர் விநியோகம் தடைப்பட்டிருந்ததாகவும் இவர்கள் பிரதேச செயலாளருக்கு சுட்டிக்காட்டினர்.
இதுதொடர்பாக நிறைய விடயங்களை கலந்துரையாடிய சாய்ந்தமருது பிரதேச செயலாளர், இவற்றுக்கு முறையான தீர்வொன்றை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும், முறைகேடுகள் இடம்பெறுவதை ஆதாரத்துடன் சமர்பிக்குமாறும் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.