ஜூலை மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் உத்தியோகபூர்வ அளவிலான உடன்படிக்கை எட்டப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கு அப்பால், இலங்கை தற்போது மிகவும் பாரதூரமான நிலைமையை எதிர்கொண்டுள்ளது என்றும் கூறினார்.
நாடாளுமன்றில் இன்று நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக உரையாற்றும்போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கையின் பொருளாதாரம் பூரண வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளதாகவும், இதுவே தற்போது நாடு எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
அந்நிய செலாவணி பிரச்சினையை முதலில் தீர்க்க வேண்டும் என்றும் குறிப்பாக 4 பில்லியன் டொலர் ஏற்கனவே பெற்றுக்கொண்டுள்ள போதும் இந்தியாவிடம் இருந்து புதிய உதவியை கோரியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதே நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பான வழி என பிரதமர் குறிப்பிட்டார்.
மத்திய வங்கி, திறைசேரி, சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எதிர்வரும் திங்கட்கிழமை, அமெரிக்க திறைசேரி திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவொன்றும் இலங்கைக்கு வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் இந்தியாவிலிருந்து வரவிருக்கும் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பின்னணியை உறுதி செய்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
லாசார்ட் மற்றும் கிளிஃபோர்ட் சான்ஸ் ஆகியோரின் ஆதரவுடன் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை ஜூலை மாத இறுதிக்குள் முடிக்க எதிர்பார்ப்பதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.