அபிவிருத்திக்கென்றும் கிழக்கை மீட்கவென்றும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் இங்கு எதுவிதமான செயற்பாடுகளும் நடைபெறவில்லை. செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும் நாங்கள் அறியவில்லை என மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கறுப்பங்கேணியில் மட்டக்களப்பு மாநகரசபையினால் அமைக்கப்பட்ட பொதுச்சந்தை இன்று திறந்துவைக்கப்பட்டது. இதன்போது உரையாற்றிய மாநகரசபை முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளாட்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”மட்டக்களப்பு மாநகரசபையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலான எங்களது அணி பொறுப்பெடுத்தபின்பு மட்டக்களப்பு நகரத்தில் பெரியளவிலான அபிவிருத்திகளை எங்களால் முன்னெடுக்க முடிந்தது.
எங்களது திட்டங்களை முன்மொழியும்போது வட்டார உறுப்பினர்களின் பிரேரணைகளை நாங்கள் கவனம் செலுத்துவதால்தான் எங்களுடைய திட்டங்கள் தெரிவு செய்யப்படுகின்றது. அந்த வகையில் கருவேப்பங்கேணி பகுதியில் ஒரு சந்தை உருவாக்கப்படவேண்டும், அதன் மூலமாக வீதியோர வியாபாரம் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எங்களது முன்னாள் உறுப்பினர் கௌரவ தவராஜா ஐயா அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க இந்த கட்டிடத்தை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம்.
இங்கு அபிவிருத்திக்கென்றும் கிழக்கை மீட்கவென்றும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் இங்கு எதுவிதமான செயற்பாடுகளும் நடைபெறவில்லை. செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும் நாங்கள் அறியவில்லை.
மக்கள் வரிசைகளில் நின்று நாட்கணக்காக எரிபொருளிற்காக அடிபடுகின்றனர். அந்த எரிபொருளை சரியான முறையில் எங்களுடைய பிரதேசத்திற்கு கொண்டுவந்து சேர்க்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்ற இரண்டு உறுப்பினர்களை சார்ந்தது. ஆனால் அதற்கான ஏற்பாடுகள் இங்கு நடைபெறவில்லை.
தொடர்ச்சியாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையாக நின்று கஷ்டத்திற்கு மத்தியில் தமக்குத் தேவையான எரிபொருளை பெற்றுவருகின்றனர். எனினும் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் குடும்ப அட்டை மூலமாக எரிபொருள் விநியோகத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டது. இதன் மூலமாக அனைவரும் குறிப்பிட்ட அளவேனும் எரிபொருளை பெறக்கூடியதாக இருக்கும்.
எனினும் மற்றைய பிரதேசங்களில் ஏனைய சில மாவட்டங்களில் குடும்ப அட்டைக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் எங்களுடைய அரசாங்க அதிபர் வேறு சில அழுத்தங்கள் காரணமாக அதனை நடைமுறைப்படுத்தவில்லை. அதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் எரிபொருள் வரிசைகளை குறைக்கலாம்.
நாங்கள் எங்களுடைய முயற்சிகளின் மூலமாக நிதிகளை ஏற்பாடு செய்கின்றோம். நேற்று முன்தினம்30 மில்லியன் ரூபா செலவில் நாவற்குடாவில் உலகவங்கியின் நிதியுதவியுடன் ஒருபொதுச்சந்தைக்கான அடிக்கல் நடப்பட்டது.
மூன்று வாரங்களுக்கு முன்னர் பிணங்கள் எரிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டது. 31 மில்லியன் ரூபா செலவில் அதற்கான கட்டுமாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதனை நாங்கள் செய்யும்போது மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பொதுமக்களை பிழையாக வழிநடத்தி பிணம் எரிக்கும் இயந்திரம் அங்கே பொருத்தப்பட்டால் சுற்றாடல் மாசடையும் என்றும் இதனால் அதனை தடுக்கவேண்டுமென்றும் அந்தத் திட்டத்திற்கு சில தடைகளை ஏற்படுத்த முயற்சித்தனர்.
எனினும் எங்களுடைய செயற்பாடு எப்பொழுதும் சட்டரீதியானதாக இருக்கும். சட்டரீதியான ஆவணங்கள் அனைத்தும் எங்களால் பெறப்பட்டிருக்கின்றன. எங்களால் ஆரம்பிக்கப்பட்ட தகனசாலையின் பணிகள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே முடிவடைந்து பொதுமக்களிடம் கையளிக்கப்படும்போது சுற்றாடல் பாதுகாக்கப்படும். வேப்ப மரங்கள் வெட்டுவது தவிர்க்கப்படும். தரையில் வைத்து எரிப்பது தவிர்க்கப்படும். இதனால் சூழல் பாதுகாக்கப்படுமே தவிர மாசடையாது.
எங்களுடைய இவ்வாறான செயற்பாடுகளுக்கு அரசியல் ரீதியான தடைகளையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கின்றது. உங்களால்தான் செய்ய முடியாது. நாங்கள் செய்கின்றோம். எங்களை செய்யவிடுங்கள். நாங்கள் மத்திய அரசிடமிருந்தோ மாகாண அரசிடமிருந்தோ நிதி கேட்கவில்லை. நாங்கள் எங்கள் முயற்சியால் நிதியை பெற்று எங்களுடைய வேலைகளைச் செய்வோம். எங்களுடைய அபிவிருத்திச் செயற்பாடுகளை சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டுசேர்ப்பதற்கு நீங்கள் அனைவரும் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும். எங்களுடைய காலத்தில் அதிகமான வீதிகள் புனரமைக்கப்பட்டன. ஒப்பந்தங்கள் கொடுக்கப்படுவதில்லை. நேரடியாக மாநகரசபை அந்த புனரமைப்பு பணிகளை முன்னெடுத்தது.” என தெரிவித்தார்.