கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் காங்கேசன்துறைக்கு புறப்படவிருந்த புகையிரதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நெருக்கடி காரணமாக புகையிரத நிலைய அதிகாரிகள் மற்றும் இளநிலை ஊழியர்கள் பணிக்கு வராததையடுத்தே புகையிரத சேவைகள் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளன.
கோட்டையிலிருந்து காலை 6.35 மணிக்கு மட்டக்களப்புக்கு புறப்பட வேண்டிய உதயதேவி எக்ஸ்பிரஸ் புகையிரதமும், 6.05 மணிக்கு காங்கேசன்துறைக்குக்கு புறப்பட வேண்டிய யாழ்தேவி புகையிரதமும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை நேற்று இரவு 9.45 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து பொல்கஹவெல நோக்கி புறப்படவிருந்த
புகையிரத சேவையும் கட்டுப்பாட்டாளர்கள் இல்லாத காரணத்தால் இரத்து செய்யப்பட்டது.
நேற்றிரவு திடீரென புகையிரதங்கள் இரத்து செய்யப்பட்டமை குறித்து புகையிரத நிலைய ஊழியர்கள் மீது பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், இன்று மேலும் பல புகையிரத சேவைகள் இரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.