இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் கடல்சார் துறைகளின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பதாக அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதாரப் பிரச்சினையை அவுஸ்ரேலியா நன்கு உணர்ந்துள்ளது. ஒரு நாட்டினால் வழங்கப்பட்ட மிக அதிகமான மனிதாபிமான உதவித் தொகையாக 50 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டது. இது வெறும் ஆரம்பம்தான். ஏனைய துறைகளிலும் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கப்படும்” என அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
மேலும் கடல்சார் மற்றும் சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அவுஸ்ரேலிய முதலீட்டை ஊக்குவிப்பது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவுகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இலங்கையுடன் அவுஸ்ரேலியாவின் நெருக்கமான ஒத்துழைப்பைப் பாராட்டினார்.