நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அதிக வெளிநாட்டு நாணயத்தை கொண்டு வரும் முயற்சியாக ஐந்து முக்கிய இந்திய நகரங்களில் இலங்கை வீதி நிகழ்ச்சிகளை நடத்தும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஸ்திரமற்றதன்மை உள்ளபோதும் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கைக்கு 61,951 சுற்றுலாப் பயணிகள் வருகைத்தந்துள்ளதாகவும் அவர்களில் அதிகமானோர் இந்திய சுற்றுலாப் பயணிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தியர்களை அழைத்து வருவதில் அரசாங்கம் ஆர்வமாக உள்ளதென்றும் இந்த நெருக்கடியில் இருந்து வெளிவர வேண்டுமானால் இலங்கைக்கு சுற்றுலாத்துறையின் மூலம் வருமானம் கிடைக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அது இன்றியமையாதது என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்தியா எங்களுக்கு மிக முக்கியமான சந்தை என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரித்தானியா உட்பட சில நாடுகள் இலங்கைக்கு அத்தியாவசியப் பயணங்களை மட்டுமே மேற்கொள்ளுமாறு குடிமக்களைக் கேட்டுக்கொண்ட போதிலும் கடந்த ஆண்டு 200,000க்கும் குறைவான சுற்றுலாப் பயணிகளே வந்திருந்த நிலையில், இந்த வருட இறுதிக்குள் நாடு ஒரு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை உள்வாங்கும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மலைகள், அழகிய கடற்கரைகள் மற்றும் ஒதுங்கிய கடலோர நகரங்களுக்கு பெயர் பெற்ற இலங்கை, ஏழு தசாப்தங்களில் மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பொருளாதார முறைகேடு மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அதன் இலாபகரமான சுற்றுலாத் துறையை அழித்துவிட்டது.
22 மில்லியன் மக்கள் வாழும் நாட்டில் அத்தியாவசியப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய போதுமான வெளிநாட்டு நாணயம் இல்லாமல், மருந்து, உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.