இலங்கையின் சுற்றுலாத்துறையில் மேலும் வீழ்ச்சி ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, நியூசிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, அவுஸ்ரேலியா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளின், இலங்கை தொடர்பான பயண நிலைப்பாடுகள் காரணமாகவே இவ்வாறு அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தும், நியூசிலாந்தும் இலங்கைக்கு செல்வதற்கு எதிராக தங்கள் நாட்டு பிரஜைகளுக்கு புதிய எச்சரிக்கைகளை வழங்கியுள்ளன.
பொருளாதார நெருக்கடி மோசமடைதல் மற்றும் உள்நாட்டு அமைதியின்மைக்கான சாத்தியக்கூறுகள் என்பன இதற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதேநேரம், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், அவுஸ்ரேலியா, அயர்லாந்து ஆகியன, சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்ட பயண ஆலோசனைகளைத் தொடர்ந்து பேணி வருகின்றன.
எனவே இந்த நிலைப்பாடு, நாட்டில் ஏற்கனவே பின்னடைவைக் கண்டுள்ள சுற்றுலாத்துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
எனினும் அத்தகைய எச்சரிக்கைகளின் தாக்கத்தை முடிந்தவரை ‘மென்மைப்படுத்த’ நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.