பிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேடிவ் கட்சி நடத்தவிருக்கும் போட்டியில் பங்கேற்கவிருப்பதாக பலர் முன்வந்துள்ள நிலையில், இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் முன்னிலை வகிப்பதாக தரவுகள் காட்டுகின்றன.
முன்னாள் திறைசேரியின் தலைவரான ரிஷி சுனக், ரிஷி சுனக் 29/358 (8 சதவீதம்) என்ற பெரும்பான்மையுடன் முதலிடத்தில் உள்ளார்.
இதற்கு அடுத்தப்படியாக தற்போது புதிதாக இந்தப் போட்டியில் இணைந்துள்ள வர்த்தகத் துறை அமைச்சர் பென்னி மார்டன்ட் (20/358 (6 சதவீதம்)) இரண்டாவது இடத்தில் உள்ளார்.
சுகாதார மற்றும் சமூக நலக் குழு துணைத் தலைவர் ஜெரிமி ஹன்ட் (20/358 (6 சதவீதம்)) மூன்றாவது இடத்தில் உள்ளார்.
ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினரே அடுத்த பிரதராகப் பொறுப்பேற்பார்.
அந்த வகையில், அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய வாக்கெடுப்பு வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி கேளிக்கை விருந்து நடத்தியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடு புகார்கள் காரணமாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தனது பிரதமர் பதவியையும் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியையும் கடந்த வியாழக்கிழமை இராஜிநாமா செய்தார்.