பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பிலான யோசனை ஒன்று விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் ஆளும் கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுப்பதாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில் 113 பெரும்பான்மை உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கோரிக்கை கடிதம் ஒன்றினை நாடாளுமன்றத்தில் முன்வைக்குமாறு அவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே குறித்த கோரிக்கை கடிதம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுயாதீன ஆணைக்குழுவின் தலைவர் பதவியை வகிக்கும் ஒருவரை பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் அரசியலமைப்பு பேரவைக்கே உள்ளது.
ஒரு லீற்றர் எரிபொருளை 250 ரூபாவிற்கு வழங்க முடியும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
இதற்கு ஆளும் தரப்பிற்குள் இருந்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன என்பதுக் குறிப்பிடத்தக்கது.