இணைந்த வடக்கு கிழக்கிலே இடைக்கால அரசாங்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தற்போது அமையவுள்ள சர்வகட்சி அரசாங்கத்திடம் தமிழ் அரசியல் தலைமைகள் முன்வைக்க வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
‘சர்வகட்சி அமையவுள்ள நிலையில், ஈழத்தமிர்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டுமென்ற கோரிக்கையை தமிழ் அரசியல் தலைமைகள் வலியுறுத்த வேண்டுமென புலம்பெயர் தமிழ் மக்கள், தாயக மக்கள் வலியுறுத்த வேண்டும்.
2012ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ரோம் ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட வேண்டும், பயங்கரவாத தடைசட்டம் நீக்கப்பட வேண்டும், இணைந்த வடக்கு கிழக்கிலே இடைக்கால அரசாங்கம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இந்த மூன்று கோரிக்கைகளையும் இடைக்கால அரசாங்கத்திடம் சமர்பித்து உடனடியாக தீர்வு காண வேண்டுமென தமிழ் அரசியல் தலைமைகள் வலியுறுத்த வேண்டும்.
இல்லையெனில் மிகப்பெரிய வரலாற்று தவறு அல்லது துரோகத்தை இழைக்கின்றோம்’ என கூறினார்.