ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.
இந்த மனு நேற்று காமினி அமரசேகர, ஷிரான் குணரத்ன மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பொதுத் தேர்தலில் போதிய வாக்குகளைப் பெறத் தவறிய ஒருவர், அரசியலமைப்பின் 14 ஆவது திருத்தத்தின் பிரகாரம் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க முடியாது என மனுதாரரான சட்டத்தரணி நாகாநந்த கொடிதுவக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசியப் பட்டியல் ஊடாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை தேர்தல் முடிந்து ஒரு வாரத்திற்குள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்பிக்க வேண்டியது சட்டரீதியான தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் 2020 பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு பல மாதங்களுக்குப் பின்னரே பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக ரணில் விக்ரமசிங்கவை நியமித்தமை அரசியலமைப்பை மீறும் செயலாகும் என்றும் நாகாநந்த கொடிதுவக்கு குறிப்பிட்டுள்ளார்.
அதன்பிரகாரம் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதில் ஜனாதிபதியாகவும் நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனவும் நாகாநந்த கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.