எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்புமனுக்கள் இன்று (19) காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.
ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான சிறப்பு நடைமுறைச் சட்டத்தின்படி, நாடாளுமன்ற பொதுச் செயலாளர் வேட்புமனுக்களுக்கான அழைப்பை விடுப்பார்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி சார்பாக அனுர குமார திஸாநாயக்க, பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் ஜனாதிபதிக்கான தெரிவில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதேவேளை பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் புதிய ஜனாதிபதியை தெரிவில் பங்கேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் இன்று நாடாளுமன்றில் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் கட்சியின் வேட்பாளரை முன்மொழிய மற்றுமொருவர் அதை ஆமோதிக்க வேண்டும். இதன்போது சம்பந்தப்பட்ட வேட்பாளர் சபையில் இருக்க வேண்டியது கட்டாயமாகும்.
கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 14ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து ஜனாதிபதி பதவி வெற்றிடமாகியுள்ளது.
ஜனாதிபதி பதவி வெற்றிடம் தொடர்பில் 1981 ஆம் 02ஆவது இலக்க ஜனாதிபதி தெரிவு விசேட ஏற்பாடுகள் 5ஆம் உறுப்புரைக்கு அமைய பிரகாரம் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தினால் கடந்த 16ஆம் திகதி நாடாளுமன்றில் அறிவிக்கப்பட்டது.
இதற்கமைய நாடாளுமன்றம் கூடிய தினத்திலிருந்து 48 மணித்தியாலத்திற்குள் அல்லது 7 நாட்களுக்கு பிந்தாமலும் வேட்பு மனுக்களை பெற்றுக்கொள்ளும் நேரம் மற்றும் திகதி ஆகியன ஒதுக்கப்பட்டுள்ளது.