இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.
இதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 329 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஆட்டநேர முடிவில், தினேஷ் சந்திமால் 86 ஓட்டங்களுடனும் பிரபாத் ஜயசூரிய 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.
இலங்கை கிரிக்கெட் அணி, தற்போது 333 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
கடந்த சனிக்கிழமை காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 222 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தினேஷ் சந்திமால் 76 ஓட்டங்களையும் மகேஷ் தீக்ஷன 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஷாயின் அப்ரிடி 4 விக்கெட்டுகளையும் ஹசன் அலி மற்றும் யாசிர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் நசிம் ஷா மற்றும் மொஹமட் நவாஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 218 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பாபர் அசாம் 119 ஓட்டங்களையும் ரிஸ்வான் 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பிரபாத் ஜயசூரிய 5 விக்கெட்டுகளையும் மகேஷ் தீக்ஷன மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ராஜித 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
4 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, நேற்றைய மூன்றாவதுநாள் ஆட்டநேர முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 329 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இன்னமும் 1 விக்கெட் வசமுள்ள நிலையில், போட்டியின் நான்காம்நாள் ஆட்டத்தை இன்று இலங்கை அணி தொடரவுள்ளது.