ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நாளைய தினம்(புதன்கிழமை) நாடாளுமன்ற வளாகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயமாக கருதி பாதுகாப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொழும்பிற்கு வெளியேயுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை கொழும்புக்கு வரவழைத்து அவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பத்தரமுல்ல பொல்துவ மன்சந்தி மற்றும் நாடாளுமன்றத்திற்கு செல்லும் ஏனைய வீதிகளில் அப்பகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்கள் மாத்திரமே பயணிக்க அனுமதி வழங்கப்படவுள்ளது.
போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்தினை முற்றுகையிட முயன்றால், அவர்களுக்கு எதிராக அதிகபட்ச பலத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் இணைந்து பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளனர்.
நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பை பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் அடங்கிய குழுவிடம் பதில் ஜனாதிபதி ஒப்படைத்துள்ளார்.
எதிர்வரும் வாரத்தில் எவ்வித இடையூறும் இன்றி நாடாளுமன்ற கூட்டங்களை நடத்துவதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கையை நடைமுறைப்படுத்துமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.