உக்ரைனுடனான தூதரக உறவை முறித்துக்கொள்வதாக ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடான சிரியா, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
“உக்ரைனுடனான இராஜதந்திர உறவுகளை பரஸ்பர கொள்கைக்கு இணங்க சிரிய அரபு குடியரசு முறித்துக் கொள்ள முடிவு செய்துள்ளது” என்று சிரிய வெளியுறவு அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது கடந்த பெப்ரவரி மாதம் படையெடுத்த ரஷ்யா, அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் பகுதிகளை தனி நாடுகளாக அங்கீகரித்தது.
இதையடுத்து, சிரியாவும் அந்தப் பிராந்தியங்களை தனி நாடுகளாக அங்கீகரித்தது.
அதனைக் கண்டித்து சிரியாவுடனான உறவை முறித்துக்கொள்வதாக உக்ரைன் அறிவித்தது.
சிரியா உள்நாட்டுப் போரில் ஜனாதிபதி அல்-அஸாதுக்கு எதிராக ஐ.எஸ்.,அல்-கொய்தா பயங்கரவாதிகள் மற்றும் அமெரிக்க ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியிருந்தனர்.
அதையடுத்து அந்தப் போரில் அரசாங்கத்துக்கு ஆதரவாக ரஷ்யா கடந்த 2015ஆம் ஆண்டு களமிறங்கியது. அதன் பிறகு சிரியாவின் பெரும்பாலான பகுதிகளை அரசாங்கப் படையினர் மீட்டனர். இதன் காரணமாக ரஷ்யாவுடன் சிரியா அரசாங்கம் மிக நெருக்கமான உறவைப் பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.