ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஏதேனும் குற்றச் செயல்கள் இடம்பெற்றிருந்தால் அதற்கான சாட்சியங்களைப் பெற்றுக்கொள்வதற்காக குற்றத்தடுப்பு அதிகாரிகள் மற்றும் கைரேகை அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இந்த குழு மத்திய கொழும்பு பொலிஸ்துறை அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முப்படையினர், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதான நுழைவாயில் உள்ளிட்ட வளாகங்களில் தங்கியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றியிருந்தனர்.
இதன்போது ஒன்பது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
களனி, எம்பிலிப்பிட்டிய, ஜாஎல, இரத்தினபுரி, வெல்லம்பிட்டிய, வாதுவ, நுகேகொட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 26 முதல் 58 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது காயமடைந்த 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.