தமிழ் மக்கள் ஒரு தேசமாக இல்லை என்பதைத்தான் நடந்து முடிந்த ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு நிரூபித்திருக்கிறது.ஒரு தேசமாக சிந்தித்திருந்திருந்தால் முதலில் கட்சிகள் தங்களுக்கு இடையே ஓர் ஒருங்கிணைப்புக்கு போயிருந்திருக்க வேண்டும். ஒரு பொது முடிவை எடுத்து வேட்பாளர்களை அணுகி இருந்திருக்க வேண்டும்.அரங்கில் காணப்பட்ட மூன்று வேட்பாளர்களுமே தமிழ் மக்களுக்கு அவர்கள் கேட்பதை தரப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் தமிழ்த் தரப்பு தனது கோரிக்கைகளை சிங்கள வேட்பாளர்களை நோக்கி கூட்டாக முன் வைத்திருந்திருக்க வேண்டும். அதன் மூலம் மூன்று வேட்பாளர்களையும் அம்பலப்படுத்தி இருந்திருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது,மூன்று வேட்பாளர்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி வாக்கெடுப்பில் பங்குபற்றவில்லை.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி,ரணிலை ஆதரித்திருக்கிறது. எந்த அடிப்படையில் அந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அக்கட்சி தன்னுடைய கூட்டாளிக் கட்சிகளுக்காவது தெளிவுபடுத்தியதா? தெரியவில்லை.
அதிகதொகை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியான கூட்டமைப்பு கொள்கைளவில் டலஸ்சை ஆதரித்திருக்கிறது.ஆனால் வாக்கெடுப்பில் அக்கட்சியின் உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் ரணிலுக்கு வாக்களித்திருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது.ரகசிய வாக்கெடுப்பு என்பது எப்பொழுதும் திருடர்களுக்கு வசதியானது. இம்முறை ஜனாதிபதி தேர்தலின் போதும் அவ்வாறு தான் நடந்திருக்கிறது.
இதில் கூட்டமைப்பு முடிவெடுத்த விதம் படு தோல்விகரமானது. முதலாவதாக அது ஒரு இறுகிப் பிணைந்த கூட்டாக இல்லை என்பதனை அது நிரூபித்திருக்கிறது.இரண்டாவதாக, சம்பந்தர் செயற்படும் தலைவராக இல்லை என்பதை நிரூபித்திருக்கிறது. ன்றாவதாக, சுமந்திரனின் தலைமைத்துவத்துக்கு கட்சிக்குள் அங்கீகாரம் குறைவு என்று தெரிகிறது. நாலாவதாக, வெளிநாட்டு தூதரகங்களுடனான உறவுகளை கூட்டமைப்பு சொதப்புகிறது என்பதை காட்டுகிறது.அதாவது,கட்சியின் உட்குளறுபடிகளுக்காக ஒரு தூதரகத்தை சபைக்கு இழுத்து விவகாரம் ஆக்கியிருக்கிறார்கள்.ஐந்தாவதாக, சொந்தமாக முடிவெடுக்காமல் வெளியரசுகளைக் கேட்டு முடிவு எடுக்கும் நிலையில் கூட்டமைப்பு காணப்படுகிறது என்பது ஆறாவதாக,கூட்டமைப்பு தமிழ் மக்களை ஒரு தேசமாக கட்டியெழுப்பும் தகுதியை இழந்துவிட்டது என்பது. இதை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
தொடக்கத்திலிருந்தே சுமந்திரனும் சாணக்கியனும் ரணிலிற்கு எதிராகக் காணப்பட்டார்கள்.திட்டவட்டமாக ஒரு தரப்புக்கு எதிராக காணப்படுவது என்பது கூட்டமைப்பு பேரம் பேசும் நோக்கத்தோடு இல்லை என்பதை காட்டியதா? ரணிலை எதிர்ப்பது என்ற முடிவு சுமந்திரன் சாணக்கியன் இருவருடையதும் தனிப்பட்ட முடிவா? அல்லது கட்சிகளின் கூட்டு முடிவா ?
அது பங்காளிக் கட்சிகளோடு சேர்ந்து எடுக்கப்பட்ட கூட்டு முடிவு அல்ல என்று தெரிகிறது. அதனால்தான் தேர்தலுக்கு முதல் நாள் இரவு கடைசி நேரத்தில் முடிவெடுப்பதற்காக கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. அல்லது சுமந்திரனும் சாணக்கியனும் எடுத்த முடிவுக்கு ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பங்காளிக் கட்சிகளையும் சம்மதிக்கச் செய்வதற்கான ஒரு உத்தியாக அந்தக் கூட்டம் கூட்டப்பட்டதா? அக்கூட்டத்தில் நடந்ததாக கூறப்படும் தகவல்கள் பத்திரிகைகளில் வெளிவந்தன.
அவ்வாறு வெளிவந்த தகவல்களின்படி, கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தின் துணைத்தூதர் அந்த உரையாடல்களில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில் சம்பந்தப்பட்டவர் இந்திய துணைத் தூதுவர்தானா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஆனால் அன்றைய சந்திப்பில் பங்குபற்றிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அவ்வாறான சந்தேகங்கள் இருக்கவில்லை என்று தெரிகிறது. இந்தியாவின் நிலைப்பாடு அதுதான் என்று அவர்கள் நம்பியதாகவும் தெரிகிறது.
இந்த விவகாரம் பின்னர் பத்திரிகைகளுக்கு கசிய விடப்பட்டது.இது ஒரு தூதரகம் சம்பந்தப்பட்ட விவகாரம். கூட்டமைப்பின் உயர் மட்டம் கட்சிக்குள் காணப்படும் உள்வீட்டு முரண்பாடுகளைக் கையாள்வதற்கு ஒரு வெளிநாட்டு தூதரகத்தை சபைக்கிழுத்திருக்கிறது. இந்த விடயத்தில் சம்பந்தப்பட்டது மெய்யாவே தூதரக அதிகாரிதான் என்றால் அது இந்திய ராஜதந்திரத்திற்கும் தோல்விதான்.கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் அதை உத்தியோகபூர்வமாக மறுத்திருக்கிறது.
தன்னை ஒரு தேசமாகக் கருதும் மக்கள் கூட்டத்தை அதிகபட்சம் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சியானது, இது போன்ற விடயங்களில் முதிர்ச்சியாகவும் பக்குவமாகவும் கண்ணியமாகவும் நடந்து கொள்ள வேண்டும். ஒரு தேசமாக நடந்து கொள்வது என்பது ஏனைய தேசங்கள் நாடுகளோடு உறவுகளை ராஜதந்திரமாகப் பேணுவதுதான்.தேச நிர்மாணத்தின் ஒரு பகுதி அது. ஏனைய தேசங்கள் நாடுகள் அரசுகளோடு உறவுகளை சுமூகமாக கையாள்வது, பேணுவது. ஓர் அரசற்ற தேசமாகிய தமிழ் மக்கள் ஏனைய தேசங்களை கையாளும்போது அந்த விடயத்தில் மிகவும் நிதானமாகவும் புத்திசாலித்தனமாகவும் நடந்து கொள்ள வேண்டும். தூதரகங்களுடனான உறவுகளை இவ்வாறு முட்டாள்தனமாக பயன்படுத்தினால் இனி எந்த ஒரு தூதரகமும் கூட்டமைப்பை நம்பி உறவுகளை வைத்துக் கொள்ளாது.
ஏற்கனவே தமிழ் அரசியல்வாதிகள் தொடர்பாக தூதரகங்கள் மத்தியில் அவ்வாறான ஒரு கருத்து காணப்படுகிறது. நம்பிக் கதைக்க முடியாத தரப்புகள் என்றும் வெளிவாயர்கள் என்றும் ரகசியத்தை பேணத்தெரியாதவர்கள் என்றும் தனிப்பட்ட உரையாடல்களை,மூடிய அறைகளுக்குள் நிகழும் உரையாளர்களை வெளியரங்கில் பேசுபவர்கள் என்றும் ஒரு கருத்து தூதரகங்கள் மத்தியில் பொதுவாக உண்டு. பெரும்பாலான தமிழ் கட்சிகளைப்பற்றி அவ்வாறான ஓர் அபிப்பிராயம் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கட்சியின் தலைவர் யாழ்ப்பாணத்தில் கனேடியத் தூதுவரை சந்தித்தபின் அந்தச் சந்திப்புத் தொடர்பாக ஊடகங்களுக்கு தெரிவிக்க தேவையில்லாத விடையங்களை தெரிவித்திருந்தார்.
அது போலவே அண்மையில் ஜப்பானியத் தூதுவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த போதும் அவர் தெரிவிக்காத விடையங்களை கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்த காரணத்தால், அவர் அப்போது ஜனாதிபதியாக இருந்த கோத்தாபயவைச் சந்தித்து தன் நிலைப்பாட்டை விளக்க வேண்டி வந்தது. அது போன்ற ஒரு சம்பவம்தான் ஜனாதிபதி தேர்தலுக்கு முதல் நாள் இரவும் நடந்திருக்கிறது.
தனது கட்சி உயர் மட்டத்தை நம்ப வைக்க வேண்டியது தலைமையின் பொறுப்பு.கட்சித் தலைமையால் தனது உறுப்பினர்களை கட்டுப்படுத்தவோ நம்பவைக்கவோ முடியவில்லை என்ற காரணத்தால்தான் வெளிநாட்டு தூதரகம் ஒன்றின் கருத்தை அங்கே தெரிவிக்க வேண்டி வந்தது. இதன் மூலம் கட்சித் தலைமை சுயமாக முடிவெடுக்கும் சக்தியற்றது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
அதன்பின் அந்த உரையாடலை ஊடகங்களுக்கு கசிய விட்டது யார்? அக்கூட்டத்தில் பங்கு பெற்றிய யாரோ ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்தான் அதைக் கசிய விட்டிருக்கிறார்.இதன்மூலம் கூட்டமைப்பு ரகசியங்களைப் பேணக்கூடிய விதத்தில் கட்டுக்கோப்பாக இல்லை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.இப்படித்தான் கூட்டமைப்பு தூதரகங்களை அணுகுமென்றால் எதிர்காலத்தில் தூதரகங்கள் கூட்டமைப்போடு நம்பகமான உறவுகளைப் பேணுமா ?
ஒரு நாட்டில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் ஒரு நெருக்கடியான வேளையில் எவ்வாறு செயல்படும் என்பதற்கு கடந்த மூன்று மாத காலமாக கொழும்பில் உள்ள மேற்கு நாட்டு தூதரகங்கள் தமது ருவிற்றர் பக்கங்களில் தெரிவிக்கும் கருத்துக்களையும் உத்தியோகபூர்வமாக வெளியிடும் அறிக்கைகளையும் தொகுத்துப் பார்த்தால் தெரியும்.
ஜனாதிபதி செயலகத்தை கைப்பற்றி வைத்திருந்த போராட்டக்காரர்களை கடந்த வியாழன் நள்ளிரவில் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் மூர்க்கத்தனமாக அகற்றிய பின் கொழும்பிலுள்ள தூதரகங்கள் அது தொடர்பாக கருத்துக்களை தெரிவித்தன. அதுமட்டுமல்ல காயமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்களை ஆஸ்பத்திரிக்கு ஏற்றிச் செல்ல வந்த அம்பியூலன்சை படைத்தரப்பு தடுத்திருக்கிறது. அப்பொழுது ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளிநாட்டு தூதரகங்களோடு தொடர்பு கொண்டு உதவி கேட்டிருக்கிறார்கள். முடிவில் வெளிநாட்டு தூதரகங்களின் வேண்டுகோளையடுத்து படைத்த்தரப்பு அம்பியூலன்சை அனுமதித்திருக்கிறது.
அடுத்த நாள் வெள்ளிக்கிழமை ரணில், கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்திருக்கிறார். வெளிநாட்டு தூதரகங்கள் சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களை நம்பி கருத்துத் தெரிவிக்கக்கூடாது என்று அவர் அச்சந்திப்பில் கூறியுள்ளார்.
சிறிய இலங்கை தீவு பேரரசுகளின் முத்தரப்பு இழுவிசைகளுக்குள் சிக்குண்டிருக்கிறது. பேரரசுகள் தேர்தல் தொடக்கம் எல்லா விடயங்களையும் தமது ராணுவப் பொருளாதார நோக்கு நிலையிலிருந்தே கையாளப் பார்க்கும். இதுதான் இலங்கை தீவின் யதார்த்தம். இந்த நீருக்குள்தான் தமிழ் மக்கள் நீந்திச் சுழியோடிக் கரையோர வேண்டியிருக்கிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் கட்சிகள் நடந்து கொண்ட விதத்தை பார்த்தால் அப்படியெல்லாம் நீந்திக் கரையேறும் தகமை தமிழ் கட்சிகளுக்கு உண்டா என்ற கேள்வி எழுகிறது.
சிங்கள அரசியல் பரப்பில் பாரம்பரிய எதிரிகளாகக் காணப்பட்ட கட்சிகள் தற்காப்பு நிலையில் எவ்வாறான கூட்டுக்களை உருவாக்கிக் கொள்கின்றன என்பதை ஜனாதிபதி தேர்தல் நிருபித்திருக்கிறது. ஆனால் தமிழ்க் கட்சிகள் தமிழ் மக்களை ஒரு தேசமாகத்திரட்டும் தரிசனத்தோடு,தகுதியோடு, பக்குவத்தோடு இல்லை. தமிழ் மக்கள் மத்தியில் தேர்தல் மைய அரசியலும் அதன் நெளிவு சுளிவுகளோடு இல்லை. மக்கள் இயக்கமும் இல்லை. தமிழ் மக்கள் தொடர்ந்தும் தோற்றுக் கொண்டிருக்கிறார்களா?